கோவை ரெயில்நிலையத்துக்கு தினமும் 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. அவற்றில் ஏராளமான பயணிகள் பயணிக்கிறார்கள். இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக கிடைக்கிறது. இங்கு வரும் பயணி களுக்கு பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் இந்த ரெயில் நிலையத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து தர சான்றிதழ் விருது கிடைத்துள்ளது.
இந்தநிலையில் கோவை ரெயில்நிலையத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி குடியரசு தினத்தன்று ரூ.13 லட்சத்தில் ரெயில் நிலைய பிரதான நுழைவு வாயில் முன்பு 100 அடி உயர இரும்பு கம்பம் அமைக்கப் பட்டு, அதில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இது பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசியக்கொடி கிழிந்தது. இதனால் ரெயில்வே நிா்வாகம் சார்பில் தேசியக்கொடி அகற்றப்பட்டது. தற்போது கொடிக்கம்பம் மட்டுமே உள்ளது. இதனால் கோவை ரெயில்நிலையத்தில் மீண்டும் தேசியக்கொடியை உடனடியாக சரி செய்து கம்பத்தில் ஏற்ற வேண்டும் என்று பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
கோவை ரெயில்நிலையத்தில் 2 டன் எடையுடன் 100 அடி உயர கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. அதில் கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி குடியரசு தினத்தன்று, 30 அடி நீளம், 20 அடி அகலம், 9½ கிலோ எடையுள்ள பாலிஸ்டர் துணியால் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
தற்போது கோவையில் இரவு நேரங்களில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. அதற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தேசியக்கொடி அவ்வப்போது கிழிந்து விடுகிறது. கடந்த 2 மாதங்களில் 3 முறை கிழிந்தது. அதை சரிசெய்ய ஒவ்வொரு முறையும் ரூ.30 ஆயிரம் வரை செலவு ஆகிறது.
இதனால் ரெயில்நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்டு இருந்த தேசியக்கொடி தற்காலிகமாக அகற்றப்பட்டு உள்ளது. காற்றின் வேகம் குறைந்ததும் தேசியக்கொடியை மீண்டும் அதே இடத்தில் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.