கோவை ‘மெட்ரோ ரயில் ‘ திட்டம் வேகமெடுக்கிறது! : கூடுதல் அறிக்கைகள் சமர்ப்பிப்பு

0
48

கோவை: கோவை ‘மெட்ரோ ரயில்’ திட்டம் தொடர்பாக கேட்கப்பட்ட கூடுதல் அறிக்கைகளை, மத்திய வீட்டு வசதி மற்றும் விவகாரங்கள் துறை அமைச்சகத்திடம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.

கோவையில் ‘மெட்ரோ ரயில்’ திட்டம் செயல்படுத்த, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கள ஆய்வு செய்து, முதல்கட்டமாக, அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோடுகளை தேர்வு செய்து, விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்தது. 2024 பிப்., 16ல் ஒப்புதல் அளித்த தமிழக அரசு, நிதியுதவிக்காக, மத்திய வீட்டு வசதி மற்றும் விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது.

‘மெட்ரோ ரயில்’ கொள்கை-2017ன் படி, எந்தவொரு நகரத்திலும் மெட்ரோ திட்டம் செயல்படுத்த வேண்டுமெனில், விரிவான திட்ட அறிக்கையோடு, ‘காம்ப்ரிஹென்சிவ் மொபிலிட்டி பிளான்’ எனப்படும் அறிக்கை இணைத்திருக்க வேண்டும்.

அதில், திட்டமிட்டுள்ள வழித்தடத்தை ஒட்டிய, வேறு சில சிறு வழித்தடங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டம், இடம் பெற்றிருக்க வேண்டும்.

ஐந்தாண்டுக்கு ஒருமுறை போக்குவரத்து ஆய்வறிக்கை அளிக்க வேண்டும். இவ்விரு அறிக்கைகள் சமர்ப்பிக்காததால், ‘மெட்ரோ ரயில்’ திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டது.

நவ., மாத துவக்கத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை வந்திருந்தபோது, இதுதொடர்பாக, நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

அதிகாரிகளிடம் முதல்வர் விசாரித்தார். இதன்பின், இரு அறிக்கைகள் தயாரிக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு, மத்திய வீட்டு வசதி மற்றும் விவகாரங்கள் துறை அமைச்சகத்திடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது சமர்ப்பித்திருக்கிறது.

இவ்வறிக்கைகளை, மத்திய அரசு ஆய்வு செய்து அனுமதி தருவதோடு, தேவையான நிதியும் ஒதுக்கும். தமிழக அரசு பரிந்துரைத்துள்ள, இரு வழித்தடங்களையும் மத்திய அரசு ஏற்று அனுமதி தருமா அல்லது முதல்கட்டமாக ஒரு வழித்தடத்தை மட்டும் அறிவிக்குமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

மாற்றம் கிடையாது’

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக்கிடம் கேட்டபோது, ”கோவை மெட்ரோ ரயில் திட்ட மதிப்பீட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், மற்ற அமைச்சகங்கள் மற்றும் ‘நிதி ஆயோக்’ ஆகியவற்றுடன் இணைந்து முன்மொழிவுகளை பரிசீலிக்கும். அவர்களது பரிந்துரைகள் மற்றும் மாற்றங்களை இணைத்தபின், திட்ட அறிக்கைக்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கும்,” என்றார்.