கோவை மாவட் ட நீதிமன்றங்களில் 1.31 லட்சம் வழக்குகளில் தீர்ப்பு! இன்னும் 77,222 வழக்குகள் நிலுவை

0
7

கோவை; கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், கடந்தாண்டில், 1.31 லட்சம் வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 77,222 ஆக உள்ளது.

கோவை மாவட்டத்தில், கோவை, மேட்டுப்பாளையம், அன்னுார், சூலுார், மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய இடங்களில் மொத்தம், 60 நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மட்டும், மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம், ஐந்து கூடுதல் செஷன்ஸ் கோர்ட்கள், எட்டு மாஜிஸ்திரேட் கோர்ட்கள், ஆறு முன்சிப் கோர்ட்கள், ஆறு சார்பு நீதிமன்றங்கள், இரண்டு குடும்ப நீதிமன்றம், இரண்டு லேபர் கோர்ட், இரண்டு மகளிர் கோர்ட், இரண்டு போக்சோ கோர்ட், இரண்டு காசோலை மோசடி வழக்கு கோர்ட், டான்பிட் கோர்ட் உட்பட 45 நீதிமன்றங்கள் உள்ளன. மாவட்டம் முழுக்க, மொத்தம், 60 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர்.

அதிக வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில், கடந்தாண்டு டிசம்பர் வரை, 1,26,114 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நிலுவை வழக்குகளை சேர்த்து, கடந்தாண்டில், 1,31,478 வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளன.

அதாவது ஒவ்வொரு ஆண்டும், புதிதாக தாக்கல் செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கையை விட, கூடுதல் வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில், 1,60,422 புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், 1,68,199 வழக்குகளுக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டில், தீர்வு காணப்பட்ட வழக்குகளின் சதவீதம் 105 ஆகவும், 2023ல், 104 ஆகவும் உள்ளது.

குறையும் நிலுவை வழக்குகள்

மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், கடந்தாண்டு(2024) டிசம்பர் வரை, மொத்தமுள்ள நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 77,222 ஆக உள்ளது. நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. குறிப்பாக, 2021-22ம் ஆண்டுகளில், கொரோனா பாதிப்பால் நீதிமன்றங்களில் விசாரணை முடங்கியதால், நிலுவை வழக்குகள் அதிகரித்தன. இதனால், 2022 காலகட்டத்தில், 86,000 வழக்குகள் நிலுவையில் இருந்தது குறிப்பிடத்தக்கது

நீண்ட கால நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால், கோவை மாவட்டத்திலுள்ள நீதிமன்றங்களில், நிலுவை வழக்கை விரைந்து முடிக்க, முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

நீண்டகால நிலுவை வழக்குகள்

நீண்ட காலமாக நிலுவையிலுள்ள வழக்குகளில், 30 ஆண்டுக்கு மேல், 10 வழக்குகளும், 21 முதல் 30 ஆண்டுகள் வரை, 80 வழக்குகளும் விசாரணை நிலையில் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு மேல், 2,193 வழக்குகளும், ஆறு முதல் 10 ஆண்டுகள் வரை 10,952 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.4- 5 ஆண்டு வரை, 10,713 வழக்குகளும், 2-3 ஆண்டுகள் வரை 17,771 வழக்குகளும், ஓராண்டு வரை, 35,503 வழக்கு களும் நிலுவையில் உள்ளன.