கோவை மாவட்ட மக்களின் கனவு கானல் நீரானது பொள்ளாச்சி,கிணத்துக்கடவு ரெயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைக்க வாய்ப்பில்லை ரெயில்வே மந்திரி அறிவிப்பு

0
104

கோவையை அடுத்த போத்தனூர்-பொள்ளாச்சி அகல ரெயில் பாதை பணிகள் 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று 2 ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் முன்பு மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்ட பல ரெயில்களை இயக்காமல் ரெயில்வே நிர்வாகம் தற்போது காலம் கடத்தி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கோவை-பொள்ளாச்சி இடையே ஒரு ரெயிலும், பொள்ளாச்சி-மதுரை இடையே ஒரு ரெயிலும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மற்ற ரெயில்கள் எதையும் ரெயில்வே நிர்வாகம் இயக்க முன்வரவில்லை.

இதைதொடர்ந்து போத்தனூர்-பொள்ளாச்சி-திண்டுக்கல் மார்க்கத்தில் புதிய ரெயில்களை இயக்க வேண்டும் என்று கோவை மற்றும் பொள்ளாச்சி பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். போத்தனூர்-பொள்ளாச்சி மார்க்கத்தில் புதிய ரெயில்களை இயக்காததற்கு காரணம் கிணத்துக்கடவு முதல் பொள்ளாச்சி ரெயில் நிலையம் வரை உள்ள பகுதி கேரள மாநிலம் பாலக்காடு ரெயில்வே கோட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் புதிய ரெயில்களை இயக்க வேண்டுமென்றால் பாலக்காடு கோட்டத்தின் அனுமதியை பெற வேண்டும். ஆனால் பாலக்காடு ரெயில்வே கோட்டம் இதற்கு அனுமதி அளிக்காததால் போத்தனூர்-பொள்ளாச்சி மார்க்கத்தில் புதிய ரெயில்கள் இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை கோவை மற்றும் பொள்ளாச்சி ரெயில் பயணிகள் தொடர்ந்து எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் கிணத்துக்கடவு மற்றும் பொள்ளாச்சி ரெயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடனோ அல்லது மதுரை கோட்டத்துடனோ இணைக்க முடியாது என்றும் தொடர்ந்து பாலக்காடு கோட்டத்தில் தான் செயல்படும் என்றும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பொள்ளாச்சி-போத்தனூர் இடையே உள்ள ரெயில்பாதை ரூ.37 கோடியே 36 லட்சம் செலவில் மின்மயமாக்கப்பட உள்ளது. அதற்கான நிதி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே ஒதுக்கப்பட்டு விட்டது. அந்த பணிகள் விரைவில் தொடங்கும். மேலும் கிணத்துக்கடவு-பொள்ளாச்சி இடையேயான ரெயில்பாதை சேலம் மற்றும் மதுரை கோட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. கிணத்துக்கடவு-பொள்ளாச்சி ரெயில் பாதை தொடர்ந்து பாலக்காடு ரெயில்வே கோட்டத்திலேயே செயல்படும். ஏனென்றால் ஏற்கனவே அந்த கோட்டத்தில் கிணத்துக்கடவு-பொள்ளாச்சி ரெயில் பாதை எந்த பாதிப்பும் இல்லாமல் உள்ளது.
ரெயில் பாதைகளை மாநிலம் வாரியாக பிரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ரெயில்வே மண்டலம் மற்றும் கோட்டங்கள் மாநிலங்களின் எல்லைகள் அடிப்படையில் பிரிக்கப்படுவதில்லை. மேலும் ரெயில்வே மேம்பாட்டு பணிகளில் மாநில பகுதிகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. கிணத்துக்கடவு-பொள்ளாச்சி ரெயில்வே பாதை ஏற்கனவே பாலக்காடு கோட்டத்தில் இருப்பதால் அதன் பணிகள் திருப்திகரமாக உள்ளது. எனவே தற்போதுள்ள நிலைமையே அதாவது கிணத்துக்கடவு-பொள்ளாச்சி ரெயில் பாதை தொடர்ந்து பாலக்காடு கோட்டத்திலேயே செயல்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கோகிலன் கூறியதாவது:-
போத்தனூர்-பொள்ளாச்சி இடையே உள்ள ரெயில் பாதை 3 ரெயில்வே கோட்டங்களுக்குள் வருகின்றன. அதாவது போத்தனூர் முதல் கிணத்துக்கடவு வரை உள்ள ரெயில் பாதை சேலம் கோட்டத்திலும், கிணத்துக்கடவு முதல் பொள்ளாச்சி ரெயில் நிலையம் வரை உள்ள ரெயில் பாதை பாலக்காடு ரெயில்வே கோட்டத்திலும், பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கு வெளியே உள்ள பகுதியில் இருந்து மதுரை வரை உள்ள ரெயில்பாதை மதுரை கோட்டத்திலும் வருகின்றன. சுமார் 40 கிலோ மீட்டர் நீளமுள்ள ரெயில்பாதை 3 ரெயில்வே கோட்டத்துக்குள் வருவதால் நிர்வாக ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் உருவாகின்றன.
போத்தனூர்-பொள்ளாச்சி மார்க்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அகல ரெயில் பாதையில் புதிய ரெயில்களை விட வேண்டுமென்றால் 3 ரெயில்வே கோட்டத்தின் அனுமதியை பெற வேண்டியது உள்ளது. ஒவ்வொரு கோட்டத்திலும் அனுமதி பெறுவது என்பது இயலாத காரியம் ஆகும்.
இதுபோன்ற காரணங்களினால் தான் போத்தனூர்-பொள்ளாச்சி அகல ரெயில் பாதை அமைத்து 2 ஆண்டுகள் ஆன பின்னரும் புதிய ரெயில்களை இயக்குவதில் 3 கோட்டத்துக்குள் ஒருமித்த கருத்து உருவாகாததால் புதிய ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் தான் கிணத்துக்கடவு-பொள்ளாச்சி ரெயில் பாதையை சேலம் அல்லது மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று கோவை மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதற்கு காரணம் இந்த 2 ரெயில்வே கோட்டங்களும் தமிழகத்துக்குள் இருப்பதால் நிர்வாக முடிவுகளை எடுப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது. ஆனால் கோவை மாவட்ட மக்களின் கோரிக்கையை மத்திய மந்திரி நிறைவேற்றாததால் அவர்களின் கனவு கானல் நீரானது. எனவே கோவை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மத்திய மந்திரி தனது நிலைப்பாட்டை மாற்றி மீண்டும் கோவை மக்களின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றுகேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.