கோவை மாவட்டத்தில் 232 பறவையினங்கள்; இரவாடிகளையும் கணக்கெடுத்த வனத்துறை

0
5

கோவை: வனத்துறை சார்பில் நடந்த ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில், கோவை மாவட்டத்தில், 232 வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழக வனத்துறை சார்பில், ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு, ஆண்டுதோறும் நடக்கிறது. பறவைகளின் வாழ்விடங்கள், அழியும் நிலையில் உள்ள பறவைகள், ஓரிட வாழ்விகள், பறவைகளுக்கான அச்சுறுத்தல்கள், வலசைப் போக்கு என, பறவைகள் சார்ந்த அனைத்தும் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றன.

நடப்பாண்டுக்கான கணக்கெடுப்பு, இரு கட்டங்களாக நடைபெற்றது. கடந்த 8, 9ம் தேதிகளில் முதல்கட்ட கணக்கெடுப்பில், ஈர நில பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன.

2ம் கட்டமாக, கோவை மாவட்டத்தில், 25 தரைவாழ் பறவை வாழிடங்கள் அடையாளம் காணப்பட்டு, கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. வனத்துறையினர், பறவை நிபுணர்கள், பறவை ஆர்வலர்கள், மாணவர்கள் என, 126 பங்கேற்பாளர்களைக் கொண்ட, 25 குழுவினர் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் தலைமையில், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் குழுவினரை ஒருங்கிணைத்து, வழிநடத்தினார்.

இந்தக் கணக்கெடுப்புகளில், 9,033 பறவைகளை நேரடி எண்ணிக்கையில், மொத்தம் 232 வகை பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. சராசரியாக ஒரு கணக்கெடுப்புப் பகுதி வாழிடத்தில், 167 முதல் 763 பறவைகள் கண்டறியப்பட்டன. கூதமண்டி, காந்தவயல் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான பறவைகள் தென்பட்டன.

ஊரக பகுதிகளில், தாளியூரில் 46 வகை பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. மொத்தம் கண்டறியப்பட்ட 232 இனங்களில், 207 தரை வாழ் பறவைகள், 25 நீர்ப்பறவைகள்.

இத்தகவலை, வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

கண்டறியப்பட்ட பத்து இரவாடிகள்!

முதன்முறையாக, இரவாடி அல்லது இரவுலாவி எனப்படும் இரவில் மட்டும் வேட்டையாடி வாழும் பறவைகளைக் கணக்கெடுக்க, இரவிலும் கணக்கெடுப்புப் பணி நடந்தது. இதில், 4 பக்கி இனங்கள், 5 ஆந்தை இனங்கள், ஒரு பெருங்கண்ணி என, 10 இரவாடி பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. இக்கணக்கெடுப்பின்போது, 41 புலம்பெயர் பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. சிவப்பு சுண்டாங்கோழி, தவிட்டுப்புறா , கல் கவுதாரி உட்பட முக்கிய பறவை இனங்கள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டன.