கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழையும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர்கால மழையும், மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடைகால மழையும் பெய்யும்.
இவ்வாறு ஆண்டுக்கு சராசரியாக 616 மி.மீட்டர் மழை பெய்ய வேண்டும். கடந்த 2018-ம் ஆண்டில் இந்த அளவைவிட அதிகமாக பெய்தது. ஆனால் 2017-ம் ஆண்டில் குறைந்த அளவே மழை பெய்தது.
இவ்வாறு பெய்யும் மழைநீரை சேமிக்காததால் தண்ணீர் வீணாகியது. எனவே நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் மழைநீரை விவசாய விளைநிலங்களில் சேகரிக்கவும், அதற்காக மண் வரப்பை உயர்த்தவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 5 ஏக்கருக்கும் கீழ் விவசாய நிலம் வைத்து உள்ள சிறு, குறு விவசாயிகளின் விளைநிலங்களில் மண் வரப்பை உயர்த்தி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. இது குறித்து மாவட்ட திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜா கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரத்து 226 எக்டேர் விவசாய நிலம் உள்ளது. இதில் விவசாயிகள் தென்னை, சின்னவெங்காயம், தக்காளி மற்றும் பல்வேறு வகையான காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார் கள். குறிப்பாக தென்னை சாகுபடி தான் அதிகளவில் உள்ளது.
மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளை சேர்ந்த கிராமங்களில் இருக்கும் விளைநிலங்களில் மண் வரப்பை உயர்த்தி அமைத்தால் நிலத்தடிநீர்மட்டம் உயரும் என்பதால் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
அதன்படி இந்த ஆண்டில் மட்டும் 7,494 விவசாயிகளின் விளைநிலத்தில் 24 ஆயிரத்து 160 ஏக்கரில் மண்வரப்பு உயர்த்தி அமைக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் எல்லா விவசாயிகள் தோட்டத்திலும் மண்வரப்பு இருக்கும். ஆனால் சொட்டுநீர் பாசனம் இருக்கும் இடத்தில் வரப்பு இருக்காது.
எனவே ஏற்கனவே வரப்பு இருக்கும் இடத்தில் மண் வரப்பை உயர்த்தியும், வரப்பு இல்லாத இடத்தில் 1½ அடி உயரத்துக்கு மண்வரப்பும் அமைக்கப்படுகிறது.
இவ்வாறு செய்வதால் மழை பெய்யும்போது தண்ணீர் வீணாகாமல் வரப்புக்குள்ளேயே தேங்கி நிற்கும். இதனால் தோட்டத்தில் மழைநீர் சேகரமாவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் தானாக உயரும்.
கோவை மாவட்டத்தில் இதுவரை 3,645 விவசாயிகளின் தென்னந்தோப்பு, தோட்டம் உள்ளிட்ட விளைநிலங்களில் 12 ஆயிரத்து 757 ஏக்கரில் மண்வரப்பு உயர்த்தி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகமாகவே உயர்ந்து உள்ளது.
இதனால் அங்குள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் அதிகமாக இருக்கிறது. இன்னும் விடுபட்ட விவசாயிகளின் நிலத்தில் மண்வரப்பை உயர்த்தி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் செய்யப்படுவதால் அனைவருக்கும் வேலை கிடைத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.