கோவை : கோவை மாநகராட்சியுடன் ஒன்பது ஊராட்சிகள், நான்கு பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சி என, 14 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. விஸ்தரிக்கப்பட்ட மாநகராட்சியில் வார்டு எண்ணிக்கை முடிவெடுக்கப்பட்டு, வரையறை செய்தபின், பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கோவை மாநகராட்சி, 257.04 சதுர கி.மீ., பரப்பளவில், 100 வார்டுகளுடன் அமைந்திருக்கிறது. கடைசியாக, 2011ல் இதன் எல்லை விஸ்தரிக்கப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மாநகராட்சியின் எல்லையை மீண்டும் விஸ்தரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஏனெனில், மாநகராட்சியை ஒட்டியுள்ள ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு போதிய வசதி கிடைக்காமல் இருந்தது. அதற்கு தீர்வு காண, அத்தகைய உள்ளாட்சி அமைப்புகளை அடையாளம் கண்டு இணைக்க முடிவெடுக்கப்பட்டது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் ஜன., 5ல் முடிகிறது. மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு முன், உள்ளாட்சி அமைப்புகளின் எல்லையை மாற்றியமைக்க தமிழக அரசு ஆலோசித்தது. அதன்படி, கோவை மாநகராட்சியோடு, மதுக்கரை நகராட்சி, பேரூர், வேடபட்டி, இருகூர், வெள்ளலுார் ஆகிய நான்கு பேரூராட்சிகள், நீலாம்பூர், மயிலம்பட்டி, சின்னியம்பாளையம், குருடம்பாளையம், சோமையம்பாளையம், அசோகபுரம், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, சீரப்பாளையம் ஆகிய ஒன்பது ஊராட்சிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
இதைத்தொடர்ந்து, வார்டு எண்ணிக்கை மறுநிர்ணயம் செய்யப்பட்டு, வார்டு எல்லைகள் வரையறை செய்யப்பட்டு, மாநகராட்சி மாமன்றத்துக்கு, அடுத்த பொதுத்தேர்தல் நடத்தப்படும். தமிழக அரசால் வெளியிடப்பட்டிருக்கும் அரசாணை, பொதுமக்கள் பார்வைக்காக அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது
தற்போது 257.04 சதுர கி.மீ., பரப்பளவில் கோவை மாநகராட்சி உள்ளது. இணைக்கப்படும் 14 உள்ளாட்சி பரப்புகளின் பரப்பு, 158.36 சதுர கி.மீ., அதனால், மாநகராட்சியின் எல்லை 415.40 சதுர கி.மீ., ஆக, விரிவடைந்துள்ளது.
இதற்கு முன், 2011ல் மாநகராட்சி எல்லை விஸ்தரித்தபோது குறிச்சி, குனியமுத்துார், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று நகராட்சிகள், வடவள்ளி, வீரகேரளம், துடியலுார், வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி, சின்ன வேடம்பட்டி, காளப்பட்டி ஆகிய ஏழு பேரூராட்சிகள் மற்றும் விளாங்குறிச்சி ஊராட்சி இணைக்கப்பட்டன. 13 ஆண்டுகளாகி விட்டன.
ஆனால், பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வசதிகள் செய்து கொடுக்கவில்லை. பற்றாக்குறையின்றி குடிநீர் கிடைப்பதில்லை.
பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படுத்தவில்லை. அதனால், தற்போது இணைக்கப்படும், 14 உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில், உள்கட்டமைப்பு வசதிகள் எப்போது மேம்படுத்தப்படும் என்பது புரியாத புதிர்.
நகராட்சியானது சூலுார்
l சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசூர் மற்றும் கணியூர் ஊராட்சிகளும், தொண்டாமுத்துார் ஒன்றியத்தில் பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியும் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கின்றன.l சூலுார் பேரூராட்சியுடன், கலங்கல் மற்றும் காங்கேயம்பாளையம் ஆகிய இரு ஊராட்சிகளை இணைத்து, சூலுார் நகராட்சியாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.l மேட்டுப்பாளையம் நகராட்சியுடன், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி இணைக்கப்பட்டுள்ளது.l பொள்ளாச்சி நகராட்சியுடன் புளியம்பட்டி, கிட்ட சூராம்பாளையம், ஆச்சிபட்டி, சின்னாம்பாளையம், மக்கினாம்பட்டி ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன