கோவை பீளமேட்டில் மருந்துக்கடை உரிமையாளர் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு

0
150
கோவை:

கோவை காந்திமாநகர் ஸ்ரீராம்நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 39). இவர் விநாயக புரத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சினிமா பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்றார். அவர், நள்ளிரவு 1.30 மணிக்கு வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து 30 பவுன் தங்க நகை, ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் பீளமேடு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். மகேந்திரன் வீட்டை கண்காணித்து திருடர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.