கோவை பா.ஜ., இந்து அமைப்புகள் முடிவு – போலீசை கண்டித்து 20ல் கறுப்பு தினம்

0
13

கோவை: ‘கோவையில் குண்டுவெடிப்பு நிகழ்த்தி, 58 பேரின் உயிரைக்குடித்து, 200 பேரின் உடல் உறுப்பை சிதறடித்த பயங்கரவாதியை தியாகியாக ஏற்றுக்கொள்ள முடியாது. இறுதி ஊர்வலத்துக்கு அனுமதியளித்த போலீசாரை கண்டித்து, வரும் 20ம் தேதி கறுப்பு தினமாக கடைபிடிக்கப்படும்’ என, பா.ஜ., தெரிவித்துள்ளது.

கோவை மாவட்ட பா.ஜ., தலைவர் ரமேஷ்குமார் பேட்டி: கோவையில் மிகப்பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்திய பாஷா, 84, ‘அல் – உம்மா’ இயக்கத்தை நிறுவியவர். தான் பயங்கரவாதியாக மாறி பல அப்பாவி இளைஞர்களை இணைத்து பயங்கரவாதியாக மாற்றியவர். குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறை தண்டனையின் போதே ‘பரோலில்’ உயிரிழந்தார். இவரது இறுதி ஊர்வலத்தை மக்கள் நெருக்கம் அதிகமுள்ள போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியில் நடத்த போலீஸ் அனுமதித்தது கண்டிக்கத்தக்கது.

ஊர்வலத்தில் பங்கேற்க, பல மாநிலங்களிலிருந்து பலர் வருகை தந்துள்ளனர். பிரிவினைவாதி அரசியல்வாதிகளும் வந்துள்ளனர். என்.ஐ.ஏ.,வால் தேடப்படும் நபர்களும் பங்கேற்றுள்ளனர். ஊர்வலமாகச் சென்று மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதே அவர்களது நோக்கம்; அதற்கு போலீசாரும் அனுமதித்துள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்

கோவை மக்களின் வேதனையையும், வருத்தத்தையும் தெரிவிக்கிறோம். அமைதிப்பூங்காவாக இருக்கும் கோவையில் மீண்டும் ஒரு பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்ற சில அமைப்புகள் முயற்சிக்கின்றன. ஊர்வலத்துக்கு அனுமதித்த போலீசை கண்டித்து பா.ஜ.,- ஆர்.எஸ்.எஸ்., இந்துமுன்னணி, விஷ்வஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் இணைந்து வரும் 20ம் தேதி, வெள்ளியன்று கருப்பு நாளாகவும், துக்க நாளாகவும் கடைபிடிப்போம்.

கடந்த 1998ல் நடந்த குண்டுவெடிப்பில், 58 பேரை பலிவாங்கிய, 200க்கும் மேற்பட்டோரை படுகாயமடையச் செய்து, கோவையின் வளர்ச்சியை 20 ஆண்டு பின்னுக்கு தள்ளிய நபரை, தியாகியாக சித்தரிப்பதை ஏற்க முடியாது. மீண்டும் ஒரு அசம்பாவிதம் கோவையில் நடக்க வேண்டுமா, அமைதி கெட வேண்டுமா என்பதை அரசும், போலீசும் முடிவு செய்யட்டும். இவ்வாறு, ரமேஷ் குமார் கூறினார்.