கோவை பாரதியார் பல்கலையில் என்னமோ நடக்குது… மர்மமா இருக்குது! நிர்வாக குளறுபடிகளால் அவதி

0
7

கோவை : பாரதியார் பல்கலையில், சமீபகாலமாக அரங்கேறி வரும் பல்வேறு குளறுபடிகளால், அதன் தரம் சீர்குலைந்துள்ளதாக, மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறைகளை களைந்து தரமான கல்வி வழங்க, பல்கலை நிர்வாகம் முன்வர வேண்டும் என பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில், 1,000 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள பாரதியார் பல்கலையின் கீழ், கோவை, நீலகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள, 133 இணைப்புக் கல்லுாரிகள் உள்ளன. பல்கலையில், 39 துறைகள், 54 முதுநிலை கல்வி, பி.எச்டி., கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.

சிறந்த கல்வியாளர்களால் கட்டமைக்கப்பட்டு, திறமைமிக்க துணைவேந்தர்களால், வளர்க்கப்பட்ட பாரதியார் பல்கலை, இன்று தனது நிர்வாக சீர்கேடுகளால், தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

2022 அக்., முதல், துணைவேந்தர் இல்லாமல் தள்ளாடுகிறது பல்கலை. இதுதவிர, பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், உட்பட, 300க்கும் அதிகமான பணியிடங்கள் ஆண்டுக்கணக்கில் காலியாகவுள்ளன.

இதனால், சமீபகாலமாக பல்கலையில் நிர்வாக சீர்கேடுகள் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. பல்கலை பதிவாளர், கோப்புகளை நிறுத்தி வைத்துள்ளதாக எழுந்த புகார் குறித்து விசாரிக்க, விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு புகார்களுக்கு உள்ளாகியுள்ள, இப்பல்கலையின் துணைவேந்தர் பொறுப்பு குழு அதிகாரி ஒருவரும், சகல அதிகாரங்களையும் கையில் எடுத்துக்கொண்டிருப்பதால், நிர்வாகம் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக பேராசிரியர்களும், மாணவர்களும் குமுறுகின்றனர்.

துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர்களுக்கு மத்தியிலும், பிற முக்கிய பொறுப்பு வகிப்பும் அதிகாரிகள் மத்தியிலும், மோதல் போக்கு இருந்து வருகிறது.

இதனால், பேராசிரியர்களின் பணிச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், கல்வியின் தரமும் பாதிக்கப்படும் சூழல் உருவாகி வருகிறது.

மாணவர்களுக்கு அல்லல்

பல்கலையில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களின் பாடுதான் பரிதாபம். பட்டமளிப்பு விழாவின் போது தமிழக கவர்னரிடமே, மாணவர் ஒருவர் தங்கள் பிரச்னைகளை புகாராக கொடுத்ததே அதற்கு சாட்சி. இதற்கு பின்னரும், பல்கலை நிர்வாகம் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த, கடிதம் அனுப்பாததால் ஆராய்ச்சியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

ஆராய்ச்சி மாணவர்கள், 54 பேருக்கு சிறப்பு கால நீட்டிப்புக்கான கடிதத்தை வழங்காததால், ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, பதிவாளரை சந்திக்க பல நாட்களாக முயற்சித்தும், சந்திக்க அனுமதிக்கவில்லை என்கின்றனர் ஆராய்ச்சி மாணவர்கள்.

சிண்டிகேட்டிலும் காலியிடங்கள்

பல்கலை சிண்டிகேட்டில் உதவி பேராசிரியர், இணை பேராசிரியர், இரண்டு பேராசிரியர், பட்டதாரிகள் உட்பட, ஐந்து இடங்கள் காலியாக உள்ளன. ஒரு சிலர், பல ஆண்டுகளாக சிண்டிகேட் பதவியில் இருப்பதும், பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

புகார்களை விசாரிக்க, விசாரணை கமிட்டி அமைத்து, ஆண்டுக்கணக்கில் இழுத்து, தவறு செய்பவர்களை காப்பாற்றும் வேலை மட்டுமே நடைபெற்று வருகிறது.

தற்போது, உயர்கல்வித்துறை செயலர் தலைமையில், நான்கு பேர் கொண்ட குழு, துணைவேந்தர் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

பல்வேறு புகார்கள், சர்ச்சைகள், முறைகேடுகள் தொடர்வதால், உரிய நடவடிக்கை எடுக்க பேராசிரியர்கள், பூட்டா உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

ஆராய்ச்சி மாணவர்கள் பிரச்னை குறித்து, பதிவாளர் (பொறுப்பு) ரூபா குணசீலனிடம் கேட்டதற்கு, ”மாணவர்கள் யாரும் என்னிடம் புகார் தெரிவிக்கவில்லை. சிறப்பு கால நீட்டிப்பு குறித்த பிரச்னைக்கு, என்னை நேரடியாக சந்தித்தால், பிரச்னை தீர்க்கப்படும்,” என்றார்.

பல்கலை நிர்வாகத்தில் தொடரும் குளறுபடிகள் குறித்து கேட்க, உயர்கல்வித்துறை செயலாளர் கோபாலை தொடர்பு கொண்ட போது, அவர் அழைப்பை ஏற்கவில்லை.