கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர் நலச்சங்க வெள்ளி விழா மற்றும் ஆண்டுவிழா ரெசிடென்சி ஓட்டலில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு சமூக ஆர்வலர் எஸ்.பி.அன்பரசன் தலைமை தாங்கினார். கோவை மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத், துணை கமிஷனர் பிரசன்ன ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க தலைவர் ஆர்.உதயகுமார், செயலாளர் கே.சந்திரபிரகாஷ் ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.
விழாவில் மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன்குமார் ஜடாவத் பேசும்போது கூறியதாவது:-
கோவை நகரில் கடந்த 40 ஆண்டுகாலம் இல்லாத அளவுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1000 கோடிக்கும் மேலான பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மூலம் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளில் தரத்தில் அனைவரும் கவனம் செலுத்தி சிறப்பாக செயல்படுத்த வேண்டும். ஒப்பந்ததாரர்களுக்கு பணி முடிந்தவுடன் பில் பட்டுவாடா செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
ஒப்பந்ததாரர்கள் மக்கள் நலப்பணிகளிலும் கவனம் செலுத்தி வருவது பாராட்டுதலுக்குரியது. கோவையில் அவர்கள் மூலம் அமைத்து கொடுத்துள்ள அங்கன்வாடி மையம் சிறந்த மையமாக விளங்கி வருகிறது. நகரின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த விழாவில் சமூக ஆர்வலர் அன்பரசனுக்கு கலாசார பாதுகாப்பு விருது வழங்கப்பட்டது. அவர் பேசும்போது நகர பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. மரம்வளர்த்தல், தூர்வாருதல் உள்ளிட்ட சமூகப்பணிகளிலும் ஆர்வம் செலுத்தி வருவது பாராட்டுதலுக்குரியது என்று கூறினார்.
ஒப்பந்ததாரர் நலச்சங்க செயலாளர் சந்திரபிரகாஷ் பேசும்போது, இந்த சங்கத்தின் மூலம் ஆண்டுதோறும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்த பணிகளில் குறைந்தபட்சம் 10 சதவீதம் லாபம் கிடைக்கும் வகையில் உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பேச்சாளர் கோபிநாத், ஒப்பந்ததாரர்கள் சங்க பொருளாளர் அம்மாசையப்பன், துணைத்தலைவர் ராஜகோபால், துணை செயலாளர் டி.மைக்கேல், துணைபொருளாளர் ஆர்.செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.