கோவை; கோவையில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் மங்களூருக்கு செல்லும் வகையில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை துவக்க வேண்டுமென, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக இயக்கப்படுவதால், பயண நேரம் குறைகிறது; பணி மற்றும் அரசு அலுவல் மற்றும் வர்த்தகம் தொடர்பான சந்திப்புகளுக்கு செல்வோர், வந்தே பாரத் எக்ஸ்பிரசை விரும்புகின்றனர். கோவையில் இருந்து சென்னைக்கும், பெங்களூருக்கும் இச்சேவை இருக்கிறது.
கோவையில் இருந்து இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், 8 பெட்டிகள் கொண்டதாக இருப்பதால், சீக்கிரமாகவே முன்பதிவு முடிந்து விடுகிறது. கூடுதலாக எட்டு பெட்டிகள் இணைத்து, 16 பெட்டிகளோடு இயக்க வேண்டும்.
கோவையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து கோவைக்கும் வந்து செல்வோர் சதாப்தி எக்ஸ்பிரஸை பயன்படுத்துவது வழக்கம்.
இந்த ரயிலை வந்தே பாரத் எக்ஸ்பிரஸாக மாற்றினால், பயண நேரம் குறைவதோடு, பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கு
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்க்கு வரவேற்பு அதிகரித்து இருப்பதாலும், தேவை இருப்பதாலும், மேலும் பல நகரங்களுக்கு இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை, தொழில் துறையினர் மத்தியில் எழுந்திருக்கிறது.
இது குறித்து, ‘கொங்கு குளோபல் போரம்’ எனும் அமைப்பின் இயக்குனர் சதீஷ் கூறியதாவது:
கோவையில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 6 மணி, 20 நிமிடங்கள் பயணிக்கிறது. இதன் வேகத்தை அதிகரித்து, 5 மணி, 30 நிமிடங்களாக குறைக்க வேண்டும்.
கோவையில் இருந்து பாலக்காடு, எர்ணாகுளம், கோட்டயம் வழியாக திருவனந்தபுரத்துக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து இதே வழித்தடத்தில் கோவைக்கும், புதிதாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்ய வேண்டும்.
இதேபோல், கோவையில் இருந்து கண்ணுார், கோழிக்கோடு, பாலக்காடு வழியாக மங்களூருக்கு வந்தே பாரத் இயக்க வேண்டும். இவ்விரு ரயில் சேவையும், பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும்.
சென்னை – கோவை, கோவை – சென்னை இடையே இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸை, வந்தே பாரத் சேவையாக மாற்றினால், பயனுள்ளதாக இருக்கும். இக்கோரிக்கைகளை, தெற்கு ரயில்வே பரிசீலிக்குமென எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.