கோவை சூப்பர் மார்க்கெட்டில் நள்ளிரவில் தீ விபத்து

0
6

கோவை, பிப். 23: கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் இருந்து போத்தனூர் செல்லும் சாலையில் தனியார் சூப்பர் மார்க்கெட் உள்ளது. இங்கு பணியாற்றிய ஊழியர்கள் நேற்று இரவு வழக்கம்போல் வேலைகளை முடித்துக்கொண்டு சூப்பர் மார்க்கெட்டை பூட்டிவிட்டு சென்றனர். இரவு 11 மணியளவில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து கரும்புகை வெளியேறிது. சிறிது நேரத்தில் தீ, மள மளவென பற்றி எரிந்தது. இதனால், அதிக அளவில் புகை வெளியேறியது.

அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர். சூப்பர் மார்க்கெட்டில் வேலையாட்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீவிபத்து நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த, தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.