கோவை குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு – சுற்றுலா பயணிகளுக்கு விரைவில் அனுமதி

0
111
பேரூர்,
கோவை நகரின் சுற்றுலா மையமாக கோவை குற்றாலம் விளங்கி வருகிறது. இங்குள்ள அருவியில் குளிப்பதற்காக கோவை உள்பட மாவட்டம் முழுவதும் ஏராளமானவர்கள் வருகை தருவார்கள். கோடை காலத்தில் அருவியில் போதிய அளவில் நீர்வரத்து இருக்காது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கோவை குற்றால வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக விட்டு,விட்டு மழைபெய்து வருகிறது.
மேலும் அருவியின் நீர்வரத்து பகுதியான குஞ்சராடி மலைமுகட்டில் இருந்து தண்ணீர் கொட்டத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் முதல் அருவியில் தண்ணீர் விழத் தொடங்கி உள்ளது. நேற்று நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ளியை உருக்கி வார்த்ததுபோல் கோவை குற்றால அருவியில் தண்ணீர் விழுகிறது. கோடைகாலத்தில் அருவியில் நீர்வரத்து இல்லாததால் கடந்த 60 நாட்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கபட்டிருந்தது.
தற்போது கோவை குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஆனால் வெள்ள அபாயம் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. தற்போது அருவிக்கரையோரம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அருவிக்கு செல்லும் பாதையில் உள்ள செடிகள் மற்றும் கற்களை அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து போளுவாம்பட்டி வனச்சரக அதிகாரி சஷான் ரவி கூறும்போது, ‘கடந்த மாதமே மழை தொடங்கினாலும் தற்போது தான் மழை தீவிரம் அடைந்து உள்ளது. அருவிக்கு அதிகப்படியான தண்ணீர் வரத்து இருப்பதால் பாதுகாப்பை கருதி சுற்றுலாபயணிகளுக்கு இன்னும் அனுமதி அளிக்க வில்லை. தண்ணீர் குறையும்பட்சத்தில் விரைவில் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்’ என்றார்.