கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

0
7

தொண்டாமுத்தூர்; கோவை குற்றாலத்தில், பொங்கல் விடுமுறை நாட்களில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி, போளுவாம்பட்டி, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அடர் வனப்பகுதியின் உள்ளே உள்ள இந்த நீர்வீழ்ச்சியில், வாரந்தோறும் திங்கட்கிழமை தவிர்த்து மற்ற ஆறு நாட்களும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சாடிவயல் சோதனை சாவடியில் உள்ள வனத்துறை டிக்கெட் கவுண்டரில், சுற்றுலா பயணிகள் டிக்கெட் பெற்று, பார்க்கிங் பகுதியில், வாகனங்களை நிறுத்திவிட்டு, வனத்துறையின் வாகனங்கள் மூலம், பழைய பார்க்கிங் பகுதிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

அங்கிருந்து, சுமார், 1½ கி.மீ., இயற்கையை ரசித்தவாறு சுற்றுலா பயணிகள் நடந்து சென்று, வெள்ளி அருவி போல கொட்டும் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக, தைப்பொங்கல் பண்டிகையன்று, 2,700 பேரும், மாட்டுப்பொங்கல் தினத்தன்று, 4,500 பேரும், காணும் பொங்கலான நேற்று, 3,600 பேரும் என, பொங்கல் விடுமுறையில், மொத்தம், 10,800 சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்தில் குளித்து மகிழ்ந்தனர்.