கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி பாஷா மரணம்

0
27

கோவை; கோவையில், 1998ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருந்த பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோடு சந்திப்பில் பேச இருந்த மேடைக்கு அருகே குண்டு வெடித்தது. தொடர்ந்து, கோவையில், 14 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

அதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, 58 பேர் கொல்லப்பட்டனர்; 231 பேர் படுகாயம் அடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டை உலுக்கிய இச்சம்பவத்தை விசாரிக்கும் வழக்கு, கோவை மாநகர போலீசிடம் இருந்து, சிறப்பு புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணைக்கு பின், தடை செய்யப்பட்ட அல் — உம்மா இயக்க நிறுவனர் பாஷா உட்பட, 166 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து, 26 ஆண்டுகளாக பாஷா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில ஆண்டுகளாக சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக, சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

உடல் நலக்குறைவை சுட்டிக்காட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஜாமின் வழங்கினார்.

ஏப்., 18ல் ஜாமினில் வந்த அவர், குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவ்வப்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன், பாஷாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பீளமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது உடல் உக்கடம் ரோஸ் கார்டன், அல் அமீன் கார்டனில் உள்ள, அவரது மகன் சித்திக் அலி வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இன்று மாலை உக்கடத்தில் இருந்து மேட்டுப்பாளையம் ரோடு, பூ மார்க்கெட் அருகே கபர்ஸ்தானில் பாஷா உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி, 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.