கோவை அருகே வானில் பறந்தபோது விபரீதம், போர் விமானத்தின் பெட்ரோல் டேங்க் வயலில் விழுந்து வெடித்து சிதறியது – விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

0
100
கோவை,
கோவை அருகே சூலூரில் இந்திய விமானப்படை பயிற்சி மையம் உள்ளது. இது, இந்தியாவின் 43-வது விமானப்படை பிரிவாகவும், 5-வது பழுது பார்க்கும் மையமாகவும் செயல்பட்டு வருகிறது. இங்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் விமானப்படை வீரர்களுக்கு விமானம் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப் படுகிறது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக இலகுரக சூப்பர்சானிக் விமானமான தேஜாஸ் விமானத்தின் முக்கிய பயிற்சி மையமாகவும் சூலூர் விமானப்படை விளங்கி வருகிறது.
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 8.40 மணியளவில் ‘தேஜாஸ்’ இலகு ரக போர் விமானம், ஒரு பயிற்சி விமானியுடன் கிளம்பியது. அது, சூலூர் பகுதியில் வானில் வட்டமடித்தபடி பயிற்சியில் ஈடுபட்டது. 7 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது விமானத்தில் இருந்த 1,200 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்கில் திடீரென்று தீப்பற்றியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயிற்சி விமானி, விமானத்தையும், தன்னையும் பாதுகாப்பதற்காக பெட்ரோல் டேங்கை, விமானத்தில் இருந்து தனியாக கழற்றி விட்டார். இதனால் உயரத்தில் இருந்து தீப்பிழம்புடன் கீழ்நோக்கி வந்த பெட்ரோல் டேங்க் சூலூர் அருகே அத்தப் பகவுண்டன்புதூரில் உள்ள நடராஜன் என்பவரது வயலில் பயங்கர சத்தத்துடன் விழுந்து வெடித்து சிதறியது.
இதில் அந்த டேங்கின் உதிரிபாகங்கள் அங்குள்ள மற்ற வயல்களிலும் சிதறி கிடந்தன. அப்போது நல்ல வேளையாக வயலில் யாரும் இல்லாததால் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்பட வில்லை. பயங்கரசத்தம் கேட்டதால் அந்த பகுதி பொதுமக்கள் ஓடிவந்து பார்த்த. விமானத்தின் உதிரிபாகங்கள் கிடந்ததால் விமானம்தான் வெடித்து சிதறிக்கிடக்கிறதோ என்று அதிர்ச்சி அடைந்தனர். பின்னர்தான் விமானத்தின் பெட்ரோல் டேங்க் என்று பொதுமக்களுக்கு தெரிந்தது.
சம்பவம் நடந்த இடத்துக்கு சூலூர் விமானப்படை அதிகாரிகள், போலீசார், கிராமநிர்வாக அதிகாரி உள்பட பலர் வந்து பார்வை யிட்டனர். பெட்ரோல் டேங்க் விழுந்த வேகத்தில் விவசாய தோட்டத்தில் 3 அடி ஆழத் துக்கு பள்ளம் விழுந்தது.
பயிற்சி விமானத்தில் மற்றொரு பெட்ரோல் டேங்க் இருந்ததால் பத்திரமாக சூலூர் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. விமானியும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். பெட்ரோல் டேங்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விமானப்படை பயிற்சி மைய தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விமானத்தின் பெட்ரோல் டேங்க் விவசாய வயலில் விழுந்ததால் பயிரிட்டு இருந்த தக்காளி, வெங்காயம் மற்றும் தென்னை மரங்கள் கருகின.
சம்பவ இடத்துக்கு சூலூர் விமானப்படை அதிகாரி எஸ்.ஏ.ஷெட்டி தலைமை யிலான 10 பேர் சென்று சிதறிய பாகங்களை சேகரித்தனர். அப்போது விவசாயி நந்த குமார் உள்பட பலர், விமானப் படை அதிகாரி களிடம் ‘விவசாய தோட்டத்தில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. பல லிட்டர் பெட்ரோல் விளை நிலத்தில் பரவியுள்ளதால் அதே மண்ணில் இனி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பரவிய மண்ணை முற்றிலும் அகற்றிவிட்டு அந்த இடத்தில் வேறு மண்ணை கொட்டினால்தான் விவசாயம் செய்ய முடியும். இதனால் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கேட்டனர். இதுகுறித்து உயர் அதிகாரி களிடம் கூறி உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று விமானப்படை அதிகாரி உறுதியளித்தார்.
பயிற்சி விமானத்தின் பெட்ரோல் டேங்க் விழுந்து வெடித்து சிதறியது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.