கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம்வனச் சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியில் கடந்த சிலநாட்களாக துப்பாக்கிசுடும் சத்தம் கேட்பதாகஅப்பகுதிமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன்பேரில் வனச்சரகர் சுரேஷ் தலைமையில் வனவர் ராதாகிருஷ்ணன், வனக்காப்பாளர்கள் மோகன்ராஜ், தினேஷ் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சேகர், கணேஷ், செந்தில், ராசுக்குட்டி ஆகியோர் இரவு நேரத்தில் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரப் பகுதியான பாரதிநகர் பகுதியில் துப்பாக்கி சுடும் சத்தம் 2முறை கேட்டது. இதைதொடர்ந்து சத்தம் கேட்ட இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர்.
அப்போது நாட்டுதுப்பாக்கி மற்றும் வெடிபொருட்களுடன் இருந்த 2 வாலிபர்கள் வனத்துறையினரை கண்டதும் தப்பி ஓடினர். உஷாரான வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து, அவர்களிடம் இருந்து ஒருநாட்டு துப்பாக்கி, மோட்டார் சைக்கிள் மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள்கோவை கவுண்டம்பாளையம்ஆர்.எஸ்.நகர் பகுதியைசேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ரஞ்சித்குமார் (வயது 22), திம்மம்பாளையம் நரிக்குறவர் காலனியை சேர்ந்த பாலுதுரை என்பவரின் மகன் ஜிந்தா (28) என்பதும், அவர்கள் மான் மற்றும் முயல்களை வேட்டையாட வந்ததும் தெரியவந்தது. அவர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
கடந்த 2 மாதத்திற்கு முன்புதான் ரஞ்சித்குமார் காரமடை வனப்பகுதியில் மானை வேட்டையாடிய போது கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து வந்தவுடன் மீண்டும் மானை வேட்டையாட முயன்ற போது சிக்கிஉள்ளது குறிப்பிடத்தக்கது.