கோவை அருகே கோர விபத்து: கார்-லாரி நேருக்கு நேர் மோதல் – காண்டிராக்டர் உள்பட 5 பேர் பலி

0
107

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாழப்புழா என்ற ஊரை சேர்ந்தவர் முகமது பசீர் (வயது 44), கட்டிட காண்டிராக்டர். இவர், கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்து தனது காரில் புறப்பட்டார். காரில் அவருடன் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளர்களான மிதுன் பண்டிட் (27), கவுரங்கா பண்டிட் (30), ஹீராலால் சிக்காரியா (28), லலிதா மண்டல் (30) ஆகியோர் வந்தனர். அவர்களது கார், அதிகாலை சுமார் 5.15 மணியளவில் கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. கோவை அருகே சூலூர் பட்டணம் பிரிவில் வந்தபோது, காரை ஓட்டி வந்த முகமது பசீர் பயணக்களைப்பில் சற்று கண்ணயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கார் அவரது கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது திருச்சியில் இருந்து காகித கழிவுகளை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி சென்ற லாரியும், காரும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்குநேர் மோதின. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

காருக்குள் இருந்த லலிதா மண்டல் என்ற பெண்ணும், கவுரங்கா பண்டிட் என்ற தொழிலாளியும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் சூலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் முகமது பசீர், ஹீராலால் சிக்காரியா ஆகிய 2 பேர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர். மிதுன் பண்டிட் என்பவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும், கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்ட னர். இந்த விபத்தில் லாரி டிரைவர் சதீ‌‌ஷ்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரளாவில் இருந்து காரில் வரும்போது, வழியில் காரை நிறுத்தி ஒரு கோவிலில் வடமாநில தொழிலாளர்கள் சாமி கும்பிட்டுள்ளனர். காருக்குள் பூஜை பொருட்களை வைத்து இருந்தனர். விபத்தில் சிக்கியதில் பூஜை பொருட்கள் ரோட்டில் சிதறிக்கிடந்தன.இந்த விபத்தினால் கொச்சி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தியதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது.