கோவை அரசு மருத்துவமனை உதடு, அன்னப்பிளவு குறைபாட்டுக்கு இலவச சிகிச்சை பெற வாருங்கள்! அழைக்கிறது

0
7

கோவை: உதடு மற்றும் அன்னப்பிளவு பிரச்னையால், பாதிக்கப்பட்டுள்ளதா உங்கள் குழந்தை…?

கோவை அரசு மருத்துவமனையில், மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையத்தில்(டி.இ.ஐ.சி.,)துவக்கநிலையிலேயே இலவசமாக அறுவைசிகிச்சை செய்து சரிசெய்துவிடலாம்.

இம்மையம், பிறந்த குழந்தை முதல், 18 வயதுள்ள குழந்தைகளுக்கு, மனநலம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு சிக்கல்களை முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்ற சிகிச்சைகளை வழங்கி வருகிறது.

தவிர, கவுன்சிலிங், ஸ்பீச் தெரப்பி, பிசியோதெரப்பி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக, உதடு மற்றும் அன்னப்பிளவு பிரச்னைகளுக்கு, உடனடியாக சிகிச்சை அளித்து சரிசெய்யப்படுகிறது.

டி.இ.ஐ.சி., பல் மருத்துவர் காயத்ரி கூறியதாவது:

பொதுவாக அன்னப்பிளவு, உதடு பிளவு ஏற்படுவதற்கு, குறிப்பிட்ட காரணங்கள் கூற இயலாது. மரபணு ரீதியாக நெருங்கிய ரத்த சொந்தங்களுக்குள், திருமணம் செய்பவர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

இப்பாதிப்பு உள்ள குழந்தைகள் பிறந்தால், எங்களுக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். உதடு, அன்னப்பிளவு இருக்கும் குழந்தைகள், தாய்ப்பால் தாமாக பருக இயலாது.

இவர்களுக்கு உடனடியாக, குழந்தையின் தாடைக்கு ஏற்ப அளவு எடுத்து, செயற்கை அன்னத்தட்டு பொருத்துகின்றோம். இதனால், பிற குழந்தைகள் போன்று பால் குடிக்கும். இதனால், எடையும் கூடும். பிறந்து மூன்று மாதங்களில் உதடு பிளவும், 1.5 ஆண்டுகளில் அன்னப்பிளவு அறுவைசிகிச்சையும் செய்கின்றோம். இதற்கு குழந்தை, சரியான எடை இருக்க வேண்டியது அவசியம்.

தயக்கமின்றி சிகிச்சைக்கு அணுகினால், இப்பிரச்னைகளை சரிசெய்ய முடியும். இந்த பிரச்னையுள்ள இங்கு பிறக்கும் குழந்தைகள் மட்டுமின்றி, பிறந்த குழந்தை முதல், 18 வயதுடைய குழந்தைகள் எங்கிருந்தாலும், தாராளமாக அணுகலாம். இவ்வாறு, அவர் கூறினார்.