கோவை அரசு மருத்துவமனையில் சுகாதாரம் என்ன விலை ? நோயாளிகளுக்கு ஈ மொய்க்கும் உணவு; கழிவறையின் அருகில் சமையலறை

0
6

கோவை; கோவை அரசு மருத்துவ மனையில், நோயாளிகளுக்கு தயாரித்து வழங்கப்படும் உணவுகளை, வினியோகிக்கும் போது, போதுமான சுகாதார முறைகள் ஏதும் பின்பற்றப்படுவதில்லை என, நோயாளிகளின் உறவினர்கள் நமது அலுவலகத்துக்கு போனில் புகார் தெரிவித்தனர். இதை கண்டறிய நேரில் சென்றபோது, புகார் உண்மை என தெரியவந்தது.

ரயில் நிலையம் அருகே, திருச்சி சாலையில் கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு, கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

நாள் ஒன்றுக்கு சராசரியாக, 7,000 முதல் 8,000 பேர் புற நோயாளிகளாகவும், 2,500 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். கேரளம் போன்ற பிற மாநில மக்களும், இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.

உள்நோயாளிகளுக்கு மருத்துவமனை சார்பில் உணவு வழங்கப்படுகிறது. அதற்காக, மருத்துவமனை வளாகத்திலேயே, பிரத்யேக நவீன சமையலறை அமைக்கப்பட்டு, உணவு தயாரிக்கப்படுகிறது. நோய்களின் தன்மைக்கு ஏற்ப, ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைப்படி, உணவு தயாரித்து, வழங்க வேண்டியது அவசியம்.

நோயாளிகளுக்கு, காலை உணவு, 7:00 மணிக்கு வழங்கப்படுகிறது. காலை, 11:00 மணிக்கு சாத்துக்குடி ஜூஸ், மதியம் 12:30 முதல் 1:00 மணி வரை மதிய உணவு, மாலை, 3-4 மணிக்குள் ஸ்நாக்ஸ், இரவு 7:00 மணிக்கு இரவு உணவு வழங்கப்படுகிறது.

பெரியவர்களுக்கு, குழந்தைகளுக்கு தனியாக, புரோட்டீன் உணவு, மில்க் பிரெட் டயட், திடஉணவு உண்ண முடியாதவர்களுக்கு, திரவ டயட் என்ற பிரிவுகளில், ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைத்தது போல், உண்மையில் உணவு வழங்கப்படுகிறதா என்பது, உண்ணும் நோயாளிகளுக்கே வெளிச்சம்.

வினியோகத்தில் பிரச்னை

உணவு வினியோகத்திற்காக தற்போது, எலக்ட்ரிக் வாகனம் ஒன்று மருத்துவமனையில் இயக்கப்படுகிறது. இவ்வாகனம், புது பில்டிங்கில் அமைந்துள்ள, வார்டுகளுக்கு உணவு எடுத்து செல்கிறது.

பிற வார்டுகளுக்கு உணவு வினியோக பணியாளர்கள், பக்கெட்களில் குறிப்பிட்ட நேரத்தில் பெற்றுச்செல்கின்றனர்.

எந்த பக்கெட்டுக்கும் மூடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பக்கெட் பற்றாக்குறை காரணமாக, சில வார்டுகளுக்கு பிளாஸ்டிக் பக்கெட்டை, சுடச்சுட சாப்பாடு எடுத்து செல்ல பயன்படுத்துகின்றனர்.

உணவு வினியோகிக்கும் போது, சுகாதாரம் சற்றும் பின்பற்றுவது இல்லை. மூடப்படாத சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பக்கெட்களில் பெற்று, திறந்த வெளியில் வைக்கின்றனர். உணவு வாங்குபவர்கள் அங்கேயே எச்சில் துப்புவதும், அதன் மீதே உணவு பக்கெட்களை வைப்பதும் என, பார்ப்பதற்கே முகம் சுழிக்கும் வகையில், உணவு கொண்டு செல்லும் பாத்திரங்கள் கையா ளப்படுகின்றன.

உணவுக்கு சக்கர நாற்காலி

தவிர, உணவு பாத்திரங்களை, நோயாளிகளை கொண்டு செல்லும் சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிச்செல்கின்றனர். அதே நாற்காலியைதான், சலவை துணிகள் கொண்டு செல்லவும் பயன்படுத்திக்கொள்கின்றனர். பாத்திரங்கள் மூடப்படாமல், ஈக்கள் மொய்க்கும் உணவுகளை நோயாளிகளுக்கு வினியோகிப்பது, மேலும் தொற்று பாதிப்புகளைத்தான் ஏற்படுத்தும்.

இதுகுறித்து, டீன் நிர்மலாவிடம் கேட்டபோது, ”சமையலறையில், அடிக்கடி ஆய்வு செய்யப்படுகிறது. சுகாதாரம் பின்பற்றவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று(நேற்று) உணவு எடுத்து செல்லும் வாகனம் பழுதான காரணத்தால், நேரடியாக வாங்கிச் சென்றனர். இதுகுறித்து, உரிய அறிவுறுத்தல் வழங்கி கண்காணிக்கப்படும்,” என்றார்.

சமையலறை அருகில் கட்டண கழிப்பிடம் உள்ள நிலையில், திறந்த நிலையில், சுகாதாரமற்ற முறையில் நோயாளிகளுக்கான உணவை கையாள்வது, ‘ஏழைகள் சாப்பிடும் உணவு தானே… யார் கேட்கப்போகிறார்கள்’ என்ற, மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என எடுத்துக் கொள்ள வேண்டிஉள்ளது.

உணவு பாதுகாப்புத்துறை?

உணவு தயாரிப்பு, வினியோகிக்கும் இடங்கள் சுகாதாரமாக இருக்க வேண்டியது அவசியம், உணவு வினியோகிப்பவர்கள் தலைக்கும், கைக்கும் உறை அணிந்து இருக்க வேண்டும். ஆனால், அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சமையலறையில், இதுபோன்ற விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. இந்த விதிமுறைகளை ஓட்டல்தோறும் வலியுறுத்தும் உணவு பாதுகாப்புத்துறை, இதுபோன்று, அரசு கட்டுப்பாட்டில் உள்ள உணவு தயாரிப்பு இடங்களை கண்டுகொள்ளாதது, அத்துறையின் மீது பல்வேறு சந்தேகங்களை எழுப்பத் தோன்றுகிறது.