கோவை : கோவை அரசு மருத்துவமனையின் புதிய ஆறு மாடி கட்டடம் மற்றும் பழைய நான்கு மாடி கட்டடத்தை இணைக்கும் வகையில், புதிய பாலம் கட்டும் பணி, 10 நாட்களுக்குள் துவங்கும் என, டீன் நிர்மலா தெரிவித்தார்.
இம்மருத்துவமனையில், கடந்தாண்டு மார்ச் மாதம், புதிய நவீன வசதிகளுடன் ஆறு மாடி கட்டடம் 287 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி, பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இங்கு, 300 படுக்கை வசதிகள், 10 அறுவை சிகிச்சை அரங்குகள், நவீன ஆய்வகங்கள் உள்ளன. தரைத்தளத்தில், அவசர சிகிச்சை பிரிவு செயல்படுகிறது
இதன் அருகில், 2016ல் கட்டப்பட்ட நான்கு மாடி கட்டடம் உள்ளது. இங்கு, ஸ்கேன் பிரிவு, இதயவியல், தோல்நோய், இ.என்.டி., வார்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்படுகின்றன.
இந்த இரு கட்டடங்களுக்கும், எளிதாக வந்து செல்லும் வகையில், புதிய பாலம் அமைக்க பல்வேறு தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
டீன் நிர்மலா கூறுகையில், ”பொதுப்பணித்துறை சார்பில் புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. இரு கட்டடங்களின், இரண்டாம் தளம் இணைக்கும் வகையில், பாலம் அமையவுள்ளது. 10, 15 நாட்களில் பணிகள் துவங்கும்,” என்றார்.