கோவையில், 250 விநாயகர் சிலைகள் ஊர்வலம் – முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட்டன

0
86

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 2-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவை மாநகரில் 372 இடங்களில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 5 நாட்களாக அந்த சிலைகளுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில் கோவை மாநகரில் அமைக்கப்பட்ட ஒரு பகுதி விநாயகர் சிலைகள் கடந்த 4-ந் தேதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு குறிச்சி, குனியமுத்தூர் குளங்களில் கரைக்கப்பட்டன. அதைதொடர்ந்து மற்ற சிலைகள் அனைத்தும் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டன. பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஒரே இடத்தில் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக செல்ல வேண்டும் என்று ஏற்கனவே கோவை மாநகர போலீசார் உத்தரவிட்டிருந்தனர்.
இதைதொடர்ந்து நேற்றுக்காலை 10 மணி முதல் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் மேள தாளம் முழங்க பட்டாசுகள் வெடித்து லாரி மற்றும் வேனில் ஏற்றப்பட்டு ஒரு இடத்துக்கு கொண்டு வரப்பட்டன. அதன்படி கோவை இந்துமுன்னணி சார்பில் அமைக்கப்பட்ட 103 விநாயகர் சிலைகளும் தெப்பக்குளம் மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து நேற்று மாலை 4 மணியளவில் ஊர்வலம் புறப்பட்டது.
ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தசரதன் முன்னிலை வகித்தார். பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், கவுமாரமடாலயம் குமரகுருபர சுவாமிகள், காமாட்சி புரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரா சுவாமிகள் ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். மேலும் தென்பாரத அமைப்பாளரும், மேகாலயா முன்னாள் கவர்னருமான வி.சண்முகநாதன், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்து முன்னணி மாநில செயலாளர் கிஷோர் குமார், நிர்வாக குழு உறுப்பினர் குணா, மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாரத்சேனா சார்பில் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட 33 விநாயகர் சிலைகள் அனைத்தும் சிவானந்தா காலனிக்கு கொண்டு வரப்பட்டன. அதன்பின்னர் ஊர்வலம் புறப்பட்டு வடகோவை மேம்பாலம், புரூக்பாண்ட் சாலை, பூமார்க்கெட் வழியாக முத்தண்ணன் குளத்தை அடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு பாரத்சேனா மாநில தலைவர் செந்தில்கண்ணன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை புலிப்பாணி சித்தர், வாராகி மணிகண்ட சுவாமிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் மாநில நிர்வாகிகள் போத்தனூர் ரவி, உங்கள் சிவா, பிரபு, வாசு, குமரேசன், கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவசேனா சார்பில் அமைக்கப்பட்டிருந்த 15 விநாயகர் சிலைகளும் ஆர்.எஸ்.புரம் லைட்ஹவுஸ் மைதானத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட்டன. இதேபோல் அகில பாரத அனுமன் சேனா (சிட்கோ ராஜேந்திரன்) சார்பில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் சாஸ்திரி மைதானத்தில் இருந்தும், அகில பாரத அனுமன் சேனா (ஸ்ரீதரன்) சார்பில் அமைக்கப்பட்ட சிலைகள் தேர்நிலை திடலில் இருந்தும், இந்து மக்கள் கட்சி (அர்ஜூன் சம்பத்) சார்பில் அமைக்கப்பட்ட சிலைகள் தேர்நிலை திடலில் இருந்தும், விசுவ இந்து பரிஷத் சார்பில் அமைக்கப்பட்ட சிலைகள் வைசியாள் வீதி, சலீவன் வீதி சந்திப்பில் இருந்தும், விவேகானந்த பேரவை சார்பில் அமைக்கப்பட்ட சிலைகள் பெரிய கடை வீதியில் உள்ள மகாலட்சுமி கோவில் முன்பிருந்தும், பொது அமைப்புகள் சார்பில் அமைக்கப்பட்ட சிலைகள் உள்பட மொத்தம் 250 சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட்டன. முன்னதாக அசுரனை சிவன் வதம் செய்வது போன்றும், மகாவிஷ்ணு அலங்கார ரதத்தில் செல்வது போன்ற பிரமாண்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்ட ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு போலீஸ்காரர் பாதுகாப்புக்காக சென்றார். இதுதவிர ஊர்வலம் சென்ற பாதை நெடுகிலும், ஊர்வலத்தின் முன்பும் போலீசார் ஜீப்பில் பாதுகாப்புக்காக சென்றனர். மேலும் சாதாரண உடையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி ஆர்.எஸ்.புரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
சிலை கரைப்பு நிகழ்ச்சி நேற்று மாலை 4 மணி முதல் இரவு வரை நடைபெற்றது. இதற்காக முத்தண்ணன் குளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோவையை அடுத்த தொண்டாமுத்தூரில் கடந்த 4-ந் தேதி சிலைகள் கரைக்க சென்ற 2 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இதையொட்டி முத்தண்ணன் குளத்தில் போலீசார் முன்எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்திருந்தனர். சிலைகளை வாகனங்களில் ஏற்றி வந்தவர்கள் அவற்றை இறக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த சிலைகளை குளத்தில் கரைத்தனர். குளத்திற்குள் போலீசாரை தவிர வேறு யாரையும் இறங்க அனுமதிக்கவில்லை.
மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக முத்தண்ணன் குளத்தில் 6 படகுகளில் தீயணைப்பு படையினர் சுற்றி வந்தனர். பெரிய சிலைகளை ஒரு இடத்திலும், சிறிய சிலைகள் ஒரு இடத்திலும் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முத்தண்ணன் குளத்திற்குள் பொதுமக்கள் செல்ல முடியாத வகையில் சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. இரவிலும் சிலைகள் கரைக்கப்பட்டதால் மின்சார விளக்கு வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்திக்காக அமைக்கப்பட்டிருந்த அனைத்து சிலைகளும் நேற்று ஒரே நாளில் கரைக்கப் பட்டன.