கோவையில் 1.60 லட்சம் பேர் நிராகரிப்பு வேண்டவே வேண்டாம் பொங்கல் தொகுப்பு

0
5

கோவை : கோவை மாவட்டத்தில் 1.60 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள், பொங்கல் தொகுப்பு வாங்காதது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. கோவையில், 11.12 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.

முதல் கட்டமாக கடந்த, 9ம் தேதி முதல் 13 ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில், 8.98 லட்சம் கார்டுதாரர்கள் மட்டுமே பொங்கல் தொகுப்பு வாங்கினர். 2.14 லட்சம் கார்டுதாரர்கள் ஆர்வம் காட்டவில்லை.

எப்படியும் கொடுத்து தீர்த்து விட வேண்டும் என்பதற்காக, பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, 25ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வாங்கி கொள்ளலாம் என, மறு அறிவிப்பு செய்யப்பட்டது.

அதன் பிறகு, 53 ஆயிரம் கார்டுதாரர்கள் பொங்கல் தொகுப்பு வாங்கினர். 1.60 லட்சம் கார்டுதாரர்கள் வாங்கவில்லை.

ரேஷன்கடை ஊழியர்கள் மொபைல் போனில் அழைத்தும், பொதுமக்கள் வாங்கவில்லை.

மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் ராஜேந்திரன் கூறுகையில், ”பொங்கல் பண்டிகைக்கு முன் 9.24 லட்சம் கார்டுதாரர்கள் பொங்கல் தொகுப்பு வாங்கி இருந்தனர். பண்டிகைக்கு பிறகு, தேதி நீட்டித்த பின், 9.51 லட்சம் கார்டுதாரர்கள் தொகுப்பு பெற்றுள்ளனர்,” என்றார்.