கோவையில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல் பரவுகிறதா? பாதிக்கப்பட்ட ஒருவர் இப்போது ‘ ஓகே’

0
19

கோவை, ; கோவையில் ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சலுக்கு, ஒருவர் பாதித்து சிகிச்சை பெற்ற நிலையில், உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த, சுகாதார ஆய்வாளர்களுக்கு மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சீன மக்களை அச்சுறுத்தி வரும் ‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல், சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்துார், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், பரவி வருவதாக சுகாதாரத்துறை அறிவித்து, பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.

இக்காய்ச்சல், ‘ ரிக்கட்ஸியா’ எனும் ஒரு வகை பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் மனிதர்களை கடிக்கும் போது பரவுகிறது. மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடலில் தடிப்பு இதன் அறிகுறிகள்.

புதர்மண்டிய இடங்கள், வனப்பகுதிகள், விவசாய நிலங்களுக்கு அருகில் வசிப்பவர்கள், மலையேற்றம் செல்பவர்கள் மத்தியில், இப்பாதிப்பு அதிகம் காணப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:

கோவை மாவட்டத்தில், ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல் பரவல் இல்லை. கடந்த மாதம் அன்னுார் பகுதியில் ஒருவர் பாதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று நலமுடன் திரும்பியுள்ளார். வேறு பாதிப்புகள் பதிவாகவில்லை.

இதுகுறித்து, 89 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மூன்று நாட்களுக்கு மேல், காய்ச்சலுடன் வரும் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். பொதுவாக இந்த வகை ஒட்டுண்ணி, செடிகளின் பின்புறம் ஒட்டி இருக்கும்.

புதர்மண்டிய இடங்கள், முள்செடிகள் இருக்கும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வகை பூச்சி கடித்த இடத்தில், தீப்புண் போன்று கருப்பு நிறத்தில் இருக்கும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

அரசு மருத்துவமனை டீன் நிர்மலாவிடம் கேட்டபோது, ”கோவை அரசு மருத்துவமனையை பொறுத்தவரை, ஸ்க்ரப் டைபஸ் காய்ச்சல், சமீபத்தில் ஏதும் பதிவாகவில்லை. கடந்தாண்டு, ஐந்து பேர் சிகிச்சை பெற்று நலமுடன் சென்றுள்ளனர்,” என்றார்.