பெங்களூர், சென்னையை தொடர்ந்து, கோவை மாவட்டத்திலும் இளம் தலைமுறையினர் மத்தியில்’லிவ்-இன்’உறவுகள் கலாசாரம் அதிகரித்து வருகிறது. திருமணத்திற்கு முன் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் சிலரும், கமிட்மென்ட் இல்லாத சுதந்திரமான வாழ்க்கை முறை என பலரும் இதுபோன்ற வாழ்க்கை முறையை தேர்வு செய்கின்றனர்.
இத்தகைய உறவுகள் சுதந்திரம் என்று தோன்றினாலும், பலருக்கு கசப்பான, ஆபத்தான அனுபவமாக மாறிவிடுகிறது. இதில், பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் சம அளவில் ஏமாற்றங்களை சந்திக்கின்றனர்.
மன அழுத்தம்
கோவையில் படிப்பிற்காக வெளி மாநிலத்தில் இருந்து வந்த மாணவி ஒருவர், ஐ.டி., பணியில் உள்ள நபருடன் நட்பாக பழகி, பின்னர் ‘ஓ.கே., கண்மணி’ பட பாணியில் லிவ்-இன் உறவில் தனியாக அப்பார்ட்மென்டில் தங்கியுள்ளார். சம்பந்தப்பட்ட மாணவியின் படிப் புச் செலவு உள்ளிட்ட பிற அனைத்து செலவுகளையும் அந்த நபரே முழுமையாக கவனித்துள்ளார். படிப்பு முடிந்ததும் உறவுக்கு, ‘குட்-பை’ சொல்லிவிட்டு, அப்பெண் பறந்துவிட இந்நபர் செய்வதறியாது மன அழுத்தத்துடன் கவுன்சிலிங் எடுத்து வருகிறார். இதில், பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் நிலை அதைவிட பரிதாப நிலையில் உள்ளது.
தண்டனை உறுதி
கோவை வழக்கறிஞர் சண்முகம் கூறியதாவது:
லிவ்-இன் உறவுகளில் இளைஞர்கள் மிக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியம். ஒரு தனிப்பட்ட வழக்கில், வழங்கிய தீர்ப்பில் லிவ்-இன் உறவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தனி வரையறைகள் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
தற்போது சமூகத்தில், ஆணும், பெண்ணும் லிவ்-இன் உறவில் இருப்பதற்கு ஒப்பந்தம் (அக்ரிமென்ட்) போடப்படுகிறது.
ஆனால், இதுபோன்ற ஒப்பந்தங்கள் செல்லாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். பி.என்.எஸ்., 23 சட்டத்தில் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, ஏமாற்றியதாக ஆண் மீது புகார் அளித்தால் தண்டனை உறுதி.
இவ்வாறு, அவர் கூறினார்.
ஆண்களும் பாதிப்பு
கோவை மகளிர் போலீசார் கூறுகையில்,’ கோவையில் லிவ்-இன் உறவுகள் அதிகரித்து உள்ளது உண்மைதான். அதில் பிரச்னை வரும் பொழுது போலீசாரிடம் சிலர் வருகின்றனர்.
லிவ்-இன்னை பொறுத்தவரையில், திருமணம் செய்து வைக்க கோரியும், இழந்த பணத்தை மீட்டு தரவேண்டும் என்ற இரு கோரிக்கையை வைத்து புகார் அளிப்பவர்களே உள்ளனர். இதில், பெண்கள் அளவிற்கு ஆண்களும் அதிக
ம் பாதிக்கப்படுகின்றனர்.
‘பணத்தை இழப்பவர்கள் அதிகளவில் உள்ளனர். ஒரு சில விவகாரங்களில் ஏற்கனவே திருமணமான நபர்கள் இதுபோன்ற லிவ்-இன் உறவில் ஏமாற்று வேலையை செய்ததும் உள்ளது. இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.’ என்றார்.
– நமது நிருபர் –