கோவையில் பின்னேற்பு தீர்மானங்கள் முதல்வர் தலையிட்டு தீர்வு காண்பாரா?

0
6

கோவை : கோவை மாநகராட்சியில் முக்கியமான தீர்மானங்களை, வார்டு கமிட்டி, நிலைக்குழுக்களில் விவாதிக்காமல், மேயரின் முன்அனுமதி பெற்று, ஒப்புதல் வழங்கி விட்டு, பின்னேற்பு கேட்டு, நேரடியாக மாமன்ற கூட்டங்களுக்கு தருவிக்கப்படுகின்றன. அதேநேரம், தீர்மானங்களை ‘ஆல் பாஸ்’ முறையில் நிறைவேற்றி விட்டு, கவுன்சிலர்களின் கருத்துக்களை மட்டும் பதிவு செய்வதால், அதிருப்தி நிலவுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் விசாரித்து தீர்வு காண, தி.மு.க., கவுன்சிலர்கள் விரும்புகின்றன

கோவை மாநகராட்சியில், மேயர் ரங்கநாயகி தலைமையில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் மாதந்தோறும் மாமன்ற கூட்டம் நடத்தப்படுகிறது.

அதேபோல், மண்டல அளவிலான வார்டு கமிட்டி கூட்டம், பொது சுகாதாரம், நகரமைப்பு, நிதிக்குழு, பணிகள் குழு, கணக்கு குழு, கல்வி குழு போன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. சமீபகாலமாக முக்கியமான தீர்மானங்களை நிலைக்குழுக்களின் விவாதத்துக்கு அனுப்பாமல், மாமன்ற கூட்டத்துக்கு நேரடியாக கொண்டு வரப்படுகின்றன. அதையும் மேயர் முன்அனுமதி பெற்று செயல்படுத்தி விட்டு, பின்னேற்பு தீர்மானங்களாக நிறைவேற்றப்படுகின்றன.

கவுன்சிலர்கள் ஆட்சேபனை தெரிவித்தால், கருத்துக்கள் மட்டும் பதிவு செய்யப்படுகிறது. இது, கவுன்சிலர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. உதாரணத்துக்கு, லே-அவுட் அப்ரூவல் தொடர்பான தீர்மானங்கள் நகரமைப்பு குழு விவாதத்துக்கு அனுப்பப்படாமல் மன்றத்துக்கு தருவிக்கப்படுகின்றன. இதில், முறைகேடு நடந்திருப்பதாக, தமிழக அரசின் கவனத்துக்கு நகரமைப்பு குழுவினர் கடிதம் எழுதியும் கூட நடவடிக்கை எடுக்காததால், அத்தவறு தொடர்ந்து நடைபெறுகிறது

அ.தி.மு.க., ஆட்சியில், 2020ல் கிடப்பில் போடப்பட்ட கோப்புகளுக்கு, இப்போது அனுமதி அளிப்பதன் அவசரம் ஏன் ஏற்பட்டது என்கிற சந்தேகமும் கவுன்சிலர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் கூறுகையில், ‘இந்த தவறான நடைமுறைக்கு, முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்றனர்.