கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த 20 வயது பட்டதாரி பெண் பீளமேட்டை சேர்ந்த 24 வயது வாலிபரை காதலித்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலர் மற்றும் அவரது நண்பருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் கரும்புக்கடையில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.
இதை கரும்புக்கடையை சேர்ந்த 2 பேர் பார்த்து விட்டு அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து கண்டித்துள்ளனர். அதன்பின்னர் அந்த வாலிபரிடம் பெண்ணை காதலிக்க கூடாது என்று கூறி கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து காதலர் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை அவர்கள் தனி அறையில் அடைத்து வைத்து பெல்ட்டால் அடித்து உதைத்துள்ளனர். சில மணி நேரம் கழித்து அவர்கள் 2 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து அந்த பெண் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை பெல்ட்டால் அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்தும், பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசிய கரும்புக்கடையை சேர்ந்த சபியுல்லா (வயது 44), இப்ராகிம் என்ற சேட் (44) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 506(2) (கொலை மிரட்டல்), 324 (பயங்கரமான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல்) உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து கோவை மாநகர போலீசார் கூறியதாவது:-
இதுபோல சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்கு தண்டனை என்ற பெயரில் சம்பந்தப்பட்டவர்களை தாக்கி சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.