கோவையில் பட்டப்பகலில் துணிகரம், ரியல் எஸ்டேட் அதிபரிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு – 2 பேர் கைது

0
89

கோவை காந்தி மாநகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 40), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் விளாங்குறிச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் அவரை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் தாங்கள் சங்கனூர் பகுதி ரவுடிகள். எனவே மரியாதையாக பணத்தை எடு என்று கூறி மிரட்டினார்கள்.

ஆனால் கார்த்திக் பணம் கொடுக்க மறுத்து நடந்து செல்ல முயன்றார். உடனே மர்ம ஆசாமிகள் 2 பேரும் அவரை கத்தியை காட்டி மிரட்டினார்கள். பின்னர் அவர்கள் கார்த்திக்கின் பாக்கெட்டில் இருந்து 750 ரூபாயை வலுக்கட்டாயமாக எடுத்துக்கொண்டனர். பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
சம்பவம் நடந்த பகுதிக்கு அருகில் கடைகள் உள்ளன. ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் கத்திமுனையில் பணத்தை பறித்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பீளமேடு போலீசில் கார்த்திக் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில் கார்த்திக்கை கத்திமுனையில் மிரட்டி பணத்தை பறித்தது கோவை கணபதி காமராஜபுரத்தை சேர்ந்த பிரசாந்த் (22), ராஜேஷ் (23) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை சவுரிபாளையம் மீனா எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ஞானபுஷ்பம் (63). இவர் சம்பவத்தன்று இரவு 8.45 மணியளவில் அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு இரு சக்கரவாகனத்தில் வந்த 2 பேர் ஞானபுஷ்பம் அணிந்திருந்த 2¼ பவுன் சங்கிலியை பறித்தனர். உடனே ஞானபுஷ்பம் ‘திருடன் திருடன்’ என்று கூச்சல்போட்டார். ஆனால் அக்கம்பக்கத்தில் யாரும் இல்லை. இதைத்தொடர்ந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேரும் தப்பிச் சென்றனர். இதுகுறித்து ஞானபுஷ்பம் பீளமேடு போலீசில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.