கோவையில் நாளை ‘ஏ 3’ மாநாடு: ‘விழித்திடு; எழுந்திடு; உறுதியாக இரு’

0
23

கோவை : கோவையில் ‘விழித்திடு; எழுந்திடு; உறுதியாக இரு’ என்ற தலைப்பிலான ‘ஏ3’ மாநாடு நாளை துவங்குகிறது.பல்வேறு தலைப்புகளில், 29 பேர் சொற்பொழிவு, கருத்துகள் பரிமாறுகின்றனர்.

‘வாய்ஸ் ஆப் கோவை’ அமைப்பு சார்பில், ‘விழித்திடு, எழுந்திடு, உறுதியாக இரு’ என்ற தலைப்பிலான ‘ஏ3′(அவேக், அரைஸ், அசெர்ட்) மாநாடு கோவை, ‘கொடிசியா-இ’ ஹாலில் நாளை, நாளைமறுதினம் (30, டிச., 1) என இரு நாட்கள் நடக்கிறது.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையில், நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் மத்திய அரசின் செயல்திட்டங்கள் பற்றி மக்களிடம் புரிதலை ஏற்படுத்தும் விதமாக இம்மாநாடு இடம்பெறுகிறது.

காலை, 9:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கும் மாநாட்டை காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காணொலி காட்சி வாயிலாக துவக்கிவைத்து சொற்பொழிவாற்றுகிறார்.

முதல் நாளில் மத்திய அமைச்சர் எல்.முருகன், இரண்டாம் நாள் முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி அண்ணாமலை,அர்ஜுன் சம்பத் என,29 பேர் பங்கேற்கின்றனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆன்மிக சொற்பொழிவாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் என, பல்துறை வல்லுனர்கள் கருத்துகளை பரிமாற உள்ளனர்.

முதல் நாளில் தர்மம், சனாதன தர்மம், ஆன்மிகம் சார்ந்த தலைப்புகளிலும், இரண்டாம் நாளில் இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான அரசியல் குறித்தும் பேசப்படுகிறது.

தலைப்புகள் தாராளம்

குஜராத்தை சேர்ந்த சுவாமி சத்வித்யானந்தா சரஸ்வதி அறிமுக உரையாற்றுகிறார். தொடர்ந்து, வரலாற்று ஆய்வாளர் ஜெயஸ்ரீ சாரநாதன் பழமையான இந்தியா மற்றும் தற்போதைய இந்தியா குறித்தும், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ‘வங்கதேசம் இன்று’ என்ற தலைப்பிலும் பேசுகின்றனர். ‘ஹிந்து ஆலயங்கள்’ குறித்து எச்.ராஜா, ‘தேசம் முதலா அல்லது மதம் முதலா’ என்ற தலைப்பில் ஜெரோம் ஆன்டோ என பல்துறை வல்லுனர்கள் கருத்துகள் தெரிவிக்கின்றனர்.

விருதுகள் பல!

மாநாட்டின் ஒரு பகுதியாக, தர்மத்துக்காக துணை நிற்கும் சமூக ஊடகங்களுக்கு ‘தார்மிக்’ விருது, தர்மம் தொடர்பான சிறந்த குறும்படங்களுக்கு விருது என பல விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இன்று இறுதி வாய்ப்பு

மாநாட்டில் பங்கேற்க அனுமதி இலவசம். அதேசயம், முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதால், www.voiceofcovai.com என்ற இணையதள முகவரியிலும், 80568 46843, 95390 09032, 89392 22250, 80726 61870, 95003 29065 ஆகிய மொபைல்போன் எண்களிலும் தொடர்புகொண்டு முன்பதிவு செய்யலாம்.