வடவள்ளி,
கோவையில் வசித்து வரும் அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் பெண்களுக்கு நாப்கின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரது சமூக சேவையை பாராட்டி பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. இவரது வாழ்க்கை வரலாறு டாக்குமெண்ட்ரி ஆக வெளிவந்து அண்மையில் ஆஸ்கர் பிலிம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோ கோவை வந்து அருணாச்சலம் முருகானந்தத்தை சந்தித்தார். பின்னர் அருணாச்சலம் முருகானந்தம் தயாரித்து விற்பனை செய்யும் நாப்கின் எந்திரங்களையும், அதன் செயல்முறைகளையும் கேட்டறிந்தார்.
இதுகுறித்து அருணாச்சலம் முருகானந்தம் கூறுகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள கரீபியன் தீவுகளில் இருந்து ஒருவர் தொடர்பு கொண்டார். நாப்கின் விழிப்புணர்வு குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து எங்களது பிரதிநிதி ஒருவர் உங்களை சந்திக்க வருவார் என்று தெரிவித்தார். அதைதொடர்ந்து சந்திக்கலாம் வாருங்கள் என்று தெரிவித்தேன்.
இந்தநிலையில் திடீரென எனது கம்பெனிக்கு கிரிக்கெட் வீரர் பிராவோ வருகை தந்தார். அவர் கடந்த முறை சென்னை வந்த போது எனது டாக்குமெண்டரி ஆஸ்கர் விருது வாங்கியது குறித்து செய்திகளில் படித்திருக்கிறார். பின்னர் அவரது சொந்த ஊரான கரீபியன் தீவுகளுக்கு சென்று விட்டார். அங்குள்ள பெண்களிடம் நாப்கின் பயன்பாடு மிகவும் சுகாதாரமற்ற முறையில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது எனது செய்தி அவரின் ஞாபகத்துக்கு வந்துள்ளது. இதனைதொடர்ந்து அவரது பிரதிநிதி என்னை சந்திக்க நேரம் கேட்டார்.
இதையடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோ, என்னை வந்து சந்தித்து நாப்கின் எந்திரங்கள் குறித்தும், இதை பயன்படுத்தும் விதம் குறித்தும் தெரிந்து கொண்டார். அவர் ½ மணி நேரத்தில் 2 நாப்கின்களை தயாரித்தார். அவரது நாட்டிற்கு ஒரு எந்திரத்திற்கு ஆர்டர் கொடுத்துள்ளார். இதை தொடங்கி வைக்க வருமாறு எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோ திடீரென வருகை தந்து என்னை சந்தித்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோவை சந்திக்க அப்பகுதியில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் திரண்டு வந்தனர். அவரிடம் செல்பி எடுத்தும், ஆட்டோகிராப் வாங்கியும் மகிழ்ந்தனர்.