கோவை, டிச. 16: கோவை உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஷபீர் (28). இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சைப்பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.
மேலும், உக்கடம் சுற்றியுள்ள கரும்புக்கடை, அல்அமீன் காலனி, ஜி.எம் நகர், குனியமுத்தூர் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. எனவே, மாநகராட்சி பகுதியில் போர்க்கால அடிப்படையில் சுகாதார தொடர்பான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.