தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் கடந்த 1998-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதைதொடர்ந்து கடந்த 2008-ம் ஆண்டு சென்னையை தவிர தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அதன்பிறகு 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அது தற்போது அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக கோவை மாநகராட்சி நிர்வாகம் அனைத்து கட்டிட உரிமையாளர்களுக்கும் நோட்டீசு அனுப்பியுள்ளது. இதில் சென்னையை விட கோவையில் சொத்து வரி 2 மடங்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
உதாரணத்துக்கு கடந்த 1998-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் வீட்டுக்கு சொத்து வரி ரூ.ஆயிரமாக இருந்தது. 2008-ம் ஆண்டு சென்னையை தவிர மற்ற பகுதிகளில் 25 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதன்மூலம் சொத்து வரி ரூ.1,250 ஆக உயர்ந்தது. ஆனால் சென்னையில் உள்ளவர்கள் சொத்து வரி ரூ.ஆயிரம் தான் செலுத்தி வந்தனர். தற்போது வீடுகளுக்கு 50 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளதால் சென்னையில் உள்ளவர்கள் ரூ.1,500 தான் சொத்து வரி செலுத்துவார்கள்.
ஆனால் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் சொத்து வரி ரூ.1,875 செலுத்த வேண்டும். இதன் மூலம் சென்னையில் உள்ளவர்களை விட கோவை உள்பட மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் சொத்து வரி அதிகமாக செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதேபோல தொழிற்சாலை கட்டிடங்களுக்கு 1998-ல் சொத்து வரி ரூ.10 ஆயிரம் என்று வைத்துக் கொள்வோம். அது 2008-ம் ஆண்டில் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் 100 சதவீதம் உயர்த்தப்பட்டதின் மூலம் கோவையில் உள்ளவர்கள் ரூ.20 ஆயிரம் சொத்து வரி செலுத்தினார்கள். ஆனால் சென்னையில் வரி உயர்த்தப்படவில்லை. இதனால் அங்கு சொத்து வரி ரூ.10 ஆயிரமாகத்தான் இருந்தது.
தற்போது சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டதால் சென்னையில் உள்ளவர்கள் சொத்து வரியாக ரூ.20 ஆயிரமாகவும், கோவையில் உள்ளவர்கள் 2 மடங்காக ரூ.40 ஆயிரம் செலுத்த வேண்டும்.
1998-ம் ஆண்டு வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரி தமிழகம் முழுவதும் ரூ.10 ஆயிரமாக விதிக்கப்பட்டது என்று வைத்துக்கொள்வோம். 2008-ம் ஆண்டு சென்னையை தவிர மற்ற பகுதிகளில் சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தப்பட்டதின் மூலம் கோவை உள்பட தமிழகம் முழுவதும் ரூ.25 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.
ஆனால் சென்னையில் 2008-ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தாததால் அங்குள்ளவர்கள் ரூ.10 ஆயிரம் தான் சொத்து வரி செலுத்தி வந்தனர். கடந்த ஆண்டு சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தப்பட்டதின் மூலம் சென்னையில் ரூ.25 ஆயிரமாகவும், சென்னையை தவிர மற்ற பகுதிகளில் ரூ.50 ஆயிரமாகவும் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் சென்னையை விட கோவையில் வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரி இருமடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிலர் கூறியதாவது:-
2008-ம் ஆண்டு சென்னையில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. ஆனால் மற்ற பகுதிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதனால் 2008-ம் ஆண்டு முதல் உயர்த்தப்பட்ட வரியை சென்னையை தவிர மற்ற பகுதி மக்கள் செலுத்தி வந்துள்ளனர். ஏற்கனவே சென்னையை தவிர மற்ற பகுதி மக்கள் அதிக வரி செலுத்தி வருவதோடு மட்டுமல்லாமல் 2008-ம் ஆண்டு முதல் கூடுதலாகவும் வரி செலுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
ஆனால் சென்னையில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப்பணிகளில் 50 சதவீதம் கூட மற்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படுவது இல்லை. சொத்து வரி மட்டும் மற்ற பகுதிகளை விட அதிகமாக வசூலிக்கும்போது வளர்ச்சிப்பணிகளிலும் மற்ற பகுதிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால் அப்படி தருவதில்லை. எனவே சென்னைக்கும் மற்ற பகுதிகளுக்கும் சொத்து வரியில் உள்ள வித்தியாசத்தை நீக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.