கோவையில் கால்நடைகளுக்கு ராஜ மரியாதை! மாட்டுப் பொங்கலன்று உற்சாகம்

0
6

கோவை: விவசாயிகளும், கால்நடைகளை வளர்ப்பவர்களும், மாட்டுப்பொங்கல் தினமான நேற்று, தாங்கள் வளர்க்கும் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகள் சீவி, வர்ணம் பூசி, மாட்டுத்தொழுவத்தில் பொங்கல் வைத்து, பூஜை செய்து, உணவாக பொங்கலை படையலிட்டு வழிபட்டனர்.

தை திருநாளின் இரண்டாம் நாளான நேற்று, கால்நடைகளுக்கு மரியாதை செய்யும் விழாவான, மாட்டுப் பொங்கல் விழா, கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில், சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதற்காக, நேற்று அதிகாலையிலேயே, வீடுகளில் வளர்க்கும் மாடுகள் மற்றும் விவசாய விளைநிலங்களில் உள்ள தோட்டத்துச்சாலைகளில், மாட்டுத்தொழுவங்கள் சுத்தம் செய்யப்பட்டு, மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு, சாணத்தால் மெழுகப்பட்டு, மாடுகள் நன்கு தேய்த்து குளிப்பாட்டப்பட்டன. மாடுகளுக்கு சந்தனம், குங்கும திலகமிட்டு, மலர் மாலைகள் அணிவித்து, கோபூஜை நடத்தப்பட்டது.

மாட்டுத்தொழுவத்தில் உள்ள கட்டாந்தரையில், ஒன்பது கட்டங்களால் ஆன பிரம்மாண்ட மண் பட்டி அமைத்தனர். ஒவ்வொரு கட்டமும் பால், பன்னீர், இளநீர், தண்ணீர் உள்ளிட்ட ஒன்பது வகை திரவியங்களால் நிரப்பப்பட்டது. பட்டியை சுற்றிலும், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது.

பட்டிக்கு மேற்கே விளக்கு வைத்து, விவசாய விளை நிலங்களில் விளைந்த அனைத்து காய்கறியையும், துண்டுகளாக நறுக்கி, அதனுடன் பசுமாட்டுப்பாலில் தயார் செய்த தயிருடன் சேர்த்து வேகவைத்து, பிரத்யேக அவியல் தயாரிக்கப்பட்டிருந்தது. அவற்றுடன், கரும்பு, வாழைப்பழம், கற்கண்டு, சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் படையலிடப்பட்டன.

பெண்கள் குலவை ஒலி எழுப்ப, அலங்கரிக்கப்பட்ட மாடு பட்டியை மிதிக்கும் நிகழ்வு நடந்தது. அப்போது, மாடுகளை வளர்ப்போர் கற்பூர துாப தீபம் காண்பித்து, மாடுகளை வணங்கினர்.

இதையடுத்து, படையலிடப்பட்ட அவியல், பொங்கல் உள்ளிட்ட உணவை வழங்கினர். பங்கேற்ற அனைவருக்கும், பொங்கல் உள்ளிட்ட சிற்றுண்டி வழங்கப்பட்டது.

மாதேஸ்வரன் கோவிலில்…

மாட்டுப்பொங்கல் விழாவையொட்டி, கோவை தடாகம் சாலையிலுள்ள, மாதேஸ்வரன் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட மாடுகளோடு, கன்றுகளையும் அதன் உரிமையாளர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

அவற்றுக்கு, நேற்று சிறப்பு ஆராதனை செய்து, மாலை அணிவித்து, மங்கல திலகமிட்டு வணங்கினர்.

இவ்வாறு, மாட்டுப்பொங்கல் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

 

பொருமல் தவிர்க்க காய்கறி அவியல்!

கால்நடைகள் எப்போதும் இலை தழைகளையும், பச்சை காய்கறியை மட்டுமே உட்கொள்ளும். மாட்டுப்பொங்கல் நாட்களில், பச்சரிசியால் ஆன சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் அதிகமாக வழங்கப்படும். இது, கால்நடைகளுக்கு வயிற்றுப்பொருமலை ஏற்படுத்தும். இதை தவிர்க்க, விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறியை நறுக்கி, அதில் பசும்பாலில் தயாரித்த கெட்டியான தயிரில் சிறிதளவு உப்பு இட்டு, வேகவைத்து கொடுப்பதாக கூறுகின்றனர் விவசாயிகள்.