கோவையில் கடந்தாண்டு முதலே அமல் கோர்ட் வளாகம் முன் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

0
13

கோவை; கோவை கோர்ட் வளாகம் முன், துப்பாக்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை கலைக்கல்லுாரி ரோட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 50 க்கும் மேற்பட்ட கோர்ட்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த வளாகத்திலுள்ள ஆறு நுழைவு வாயில்களில் ஒன்று மூடப்பட்டுள்ளது.

மற்ற நுழைவு வாயில் வழியாக, பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், திருநெல்வேலி நீதிமன்ற வளாகம் அருகில், கடந்த 20ம் தேதி பட்டப்பகலில் வாலிபர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டது.

அதன்படி, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 15 போலீசார்

கடந்தாண்டு, பிப்., 13ல் கோர்ட்டில் ஆஜராகி விட்டு, பின்புற நுழைவு வாயில் வழியாக சென்றரவுடி கோகுல், வெட்டி கொலை செய்யப்பட்டார்.

அந்த சம்பவத்தை தொடர்ந்து, கோவை கோர்ட் வளாகம் முன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, 15 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, கூடுதலாக ஐந்து போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு எஸ்.ஐ.,க்கள் அடங்குவர். இவர்கள், அதி நவீன துப்பாக்கி ஏந்தியவர்கள்.

கோர்ட்டுக்கு வரும் பொதுமக்களின் உடமைகள், மெட்டல் டிடெக்டர் கருவி வாயிலாக தீவிரமாக பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

யார் மீதாவது சந்தேகம் வந்தால், அவர்கள் எந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராக வருகிறார்கள் என்பது குறித்த ஆவணங்கள் மற்றும் சம்மனை சரி பார்த்த பிறகு, அனுமதி வழங்கப்படுகிறது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் குறித்த தகவலும், பாதுகாப்பு போலீசாரிடம் வழங்கப்பட்டுள்ளது.