கோவையில் ஒரு நாள் சுற்றுலா திட்டம் உருவாக்க ஆலோசனை

0
9

தொண்டாமுத்தூர்; கோவையில், சுற்றுலா தலங்களை இணைத்து, ஒரு நாள் சுற்றுலா திட்டம் உருவாக்க ஆலோசனை செய்து வருவதாக, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை, நேரில் ஆய்வு செய்ய, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கோவை வந்தார். நேற்று காலை, போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள, கோவை குற்றாலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், சுவாமி தரிசனம் செய்தார்.அங்கு, மலை ஏற வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாபயணிகளுக்கு தேவையான, முன்னேற்பாடுகள்குறித்து ஆய்வு செய்தார்.

இதன் பின் அவர் கூறுகையில், கோவை குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, பொருட்கள்பாதுகாப்பு அறை, உடை மாற்றும் அறை, கழிப்பறை, வாகன வசதி, நுழைவு சீட்டு வழங்கும் அறை போன்ற தேவைகள் நிறைவேற்றப்படும். கோவையில் உள்ள சுற்றுலா தலங்களை ஒருங்கிணைத்து, ஒரு நாள் சுற்றுலா திட்டம் குறித்தும், ஆலோசனை நடத்தி வருகிறோம், என்றார்.

கலெக்டர் கிராந்தி குமார், வனத்துறையினர், அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.