கோவையில் ஏற்றுமதிக்கான கிளஸ்டர் பம்ப் உற்பத்தியாளர்கள் திட்டம்

0
6

கோவை; கோவையில், பம்ப் ஏற்றுமதிக்கான கிளஸ்டர் அமைப்பது என, பம்ப் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கோவையில், 500க்கும் அதிகமான மோட்டார் பம்ப் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. கோவையில் இருந்து வடமாநிலங்களுக்கு மட்டுமின்றி, உலகம் முழுக்க பம்ப்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோவை பம்ப்களின் தரம் இந்திய அளவில் பிரசித்தி பெற்றது.

எரிசக்தித் திறன் அமைப்பு (பி.இ.இ.,) மோட்டார் பம்ப் தரக் குறியீடுகளில் புதிய விதிமுறைகளைப் புகுத்த உள்ளது. அதுதொடர்பாக, பம்ப் உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், ஆவாரம்பாளையத்தில் உள்ள கோ இண்டியா அரங்கில் நேற்று நடந்தது.

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சீமா), சிடார்க், கோ இண்டியா சார்பில் நடந்த கூட்டத்துக்கு, சீமா தலைவர் மிதுன் ராம்தாஸ் வரவேற்றார்.

புதிதாக அமல்படுத்தப்படவுள்ள பி.இ.இ., விதிமுறைகள் குறித்து, இந்திய பம்ப் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கார்த்திக் விளக்கினார்.

பம்ப் உற்பத்தியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அரசு தரப்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சிடார்க் தலைவர் மோகன் செந்தில்குமார், கோ இண்டியா தலைவர் விக்னேஷ் உள்ளிட்டோர் பேசினர்.

மேலும், பம்ப் உற்பத்தியில், வட மாநிலங்களின் போட்டியைச் சமாளிப்பது, ஏற்றுமதியை அதிகரிக்க, கோவையில் கிளஸ்டர் அமைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

சீமா துணைத் தலைவர்கள் செந்தில்குமார், அருண், சங்க நிர்வாகிகள் உட்பட பம்ப் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.