கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் எதிரொலியாக கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
முழு அடைப்பு
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் நாடுமுழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். கேரளாவில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக கேரளாவில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
பஸ்கள் நிறுத்தம்
கோவை உக்கடம் பஸ்நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர், குருவாயூர் உள்பட பல்வேறு இடங்களுக்கு தினமும் 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று கேரள மாநிலம் கோழிக்கோடு, பாலக்காடு, குருவாயூர் மற்றும் பல இடங்களில் இருந்து கோவை காந்திபுரத்துக்கு பல பஸ்கள் இயக்கப்படுகிறது.
முழு அடைப்பு காரணமாக கேரளாவில் இருந்து கோவை வரும் பஸ்கள் நிறுத்தப்பட்டது. அதுபோன்று கோவையில் இருந்து காலையில் சில பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் அங்குள்ள சில பகுதிகளில் பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், பஸ்கள் இயக்கப்படவில்லை. இதையடுத்து அந்த பஸ்கள் அனைத்தும் உக்கடம் பஸ்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
பயணிகள் அவதி
இதன் காரணமாக கோவையில் இருந்து கேரளா செல்லும் பயணிகள் கடுமையாக அவதியடைந்தனர். சிலர் ரெயில்கள் மூலம் கேரளாவுக்கு சென்றனர். இதனால் கேரளாவில் இருந்து கோவை வந்த ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தன.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, கேரளாவில் நடந்த முழு அடைப்பு காரணமாக கோவையில் இருந்து கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. அங்கு நிலவி வரும் சூழ்நிலையை பொறுத்து பஸ்கள் இயக்கப்படும் என்றனர்.
(பாக்ஸ்) வாளையாறு பகுதியில் இருந்து நடந்து சென்ற பயணிகள்
முழு அடைப்பு காரணமாக கோவையில் இருந்து கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆனால் தமிழக-கேரள எல்லையான வாளையாறு சோதனை சாவடி வரை கோவையில் இருந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாளையாறு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த கோவைக்கு வந்த கேரள மக்கள், டவுன் பஸ்கள் மூலம் வாளையாறு சோதனை சாவடி சென்றனர். பின்னர் அவர்கள் சோதனை சாவடியை கடந்து தங்கள் வீடுகளுக்கு அங்கிருந்து நடந்து சென்றனர்.
கேரளாவில் ஆட்டோ மற்றும் ஜீப்களும் ஓடவில்லை என்பதால் பொருட்கள் வாங்க கோவை வந்தவர்கள், வாளையாறு சோதனை சாவடியில் இருந்து அந்த பொருட்களை தங்கள் தலைமீது வைத்து சுமந்தபடி நடந்து சென்றது பார்க்க பரிதாபமாக இருந்தது.