கோவை: கோவை குண்டுவெடிப்பு கைதிகளுக்கு, துணைபோகும் தமிழக அரசை கண்டித்து, பா.ஜ., சார்பில் கோவையில் நேற்று மாலை, ‘கருப்பு தின பேரணி’ நடத்தப்பட்டது.
கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோட்டில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
கடந்த, 2022 அக்., 23ல் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன், ஒரு தீவிரவாதி மனித வெடிகுண்டாக மாறி, காரில் வருகிறான். கோவை மாநகரத்துக்குள் அதிகமான மக்கள் செல்லக்கூடிய துணிக்கடைக்குள் அந்த காரை நிறுத்த வேண்டும்; அந்த கார் வெடிக்கும்போது, துாண்கள் சரிந்து, கடை இடிந்து விழ வேண்டும் என்ற நோக்கத்துடன் வரும்போது, கோவில் அருகே வேகத்தடையை கடந்தபோது, காஸ் சிலிண்டர் சர்க்யூட் இணைப்பு ‘கட்’ ஆகி விட்டது; வண்டி அவ்விடத்திலேயே நிற்கிறது.
அப்போது, வெடித்து அதே இடத்திலேயே தீவிரவாதி இறந்து விடுகிறான். இது, மனித வெடிகுண்டு தாக்குதல் என கூறினோம்.
இதை, சிலிண்டர் வெடிப்பு என தமிழக முதல்வர் கூறினார். மக்களுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும்போது, ஒரு முதல்வர் எப்படி பேசினார்; சட்டம் – ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்கு இது உதாரணம்.
காட்டில் சதித்திட்டம்
2022ம் ஆண்டு பிப்., 7ம் தேதி, சத்தியமங்கலம் வனப்பகுதியில் உமர்பாருக் என்பவன் தலைமையில் எட்டு பேர் இணைகின்றனர். அதில், கார் குண்டுவெடிப்பில் பலியான முபின் ஒருவன். அவர்கள் சத்யப்பிரமாணம் செய்கின்றனர்.
ஒவ்வொருவரும் என்னென்ன வேலை செய்ய வேண்டுமென, உமர்பாருக் கூறுகிறான்.
பிப்., 7ல் சத்தியமங்கலம் காட்டில் திட்டமிடுகின்றனர். ‘இத்தீவிரவாதத்தை தற்கொலை தாக்குதலாக நடத்த வேண்டியது, உன்னுடைய பொறுப்பு’ என, முபினிடம் உமர்பாருக் தெரிவிக்கிறான்.
மார்ச் மாதத்தில், 750 கிலோ அமோனியம் நைட்ரேட் வாங்குகிறார். அதனுடன் சல்பர் கலந்தால், வெடிபொருள். காரில் சிலிண்டருடன் வந்த முபினுடைய இரண்டாவது இலக்கு, போலீஸ் கமிஷனர் அலுவலகமாக இருந்தது. ஏழு பேர், ஏழு இடங்களில்
தாக்குதல் நடத்த வேண்டுமென, எழுதி வைத்திருக்கின்றனர்.
முதல் இடம் துணிக்கடை; இரண்டாவது இடம் போலீஸ் கமிஷனர் அலுவலகம். ஆனால், காவல்துறை தரப்பில், அது சிலிண்டர் வெடிப்பு என கூறப்பட்டது. முதலில், காவல் சீருடை அணிந்து பணிபுரிந்து வருகிறீர்களே, நீங்கள் பஸ்பமாகி இருப்பீர்கள்.
கழுத்தை அறுக்கும் வீடியோ
முபின் ஏழு நிமிட வீடியோ பதிவு செய்திருக்கிறான்; எப்படி கழுத்தை அறுப்பது; எப்படி கொலை செய்ய வேண்டும் என, வீடியோ பதிவிட்டிருக்கிறான். நான் சொல்வது உண்மையா என்பதை, ‘சார்ஜ் சீட்’டை படித்துப் பாருங்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய புலனாய்வு ஆணையம் இதுவரை 18 பேரை கைது செய்திருக்கிறது. நான்கு ‘சார்ஜ் சீட்’ பதிவு செய்திருக்கின்றனர். அதனால், கோவையில் என்.ஐ.ஏ., அமைக்க, மத்திய அரசு பரிசீலனை செய்கிறது.
1998 பிப்., 14ல் நடந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு, மைசூரில் இருந்து வெடிமருந்து வாங்கி வந்தவர் பாஷா. அதில், 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதே பாஷா, 2003ல் கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றபோது, நிருபர்களை பார்த்து, ‘கோவைக்கு மோடி வந்தால், கொன்று விடுவேன்’ என்று கத்தினார். அப்போது, குஜராத் முதல்வராக மோடி இருந்தார். கோவைக்கு வந்தார்; காஞ்சிபுரம், குஜராத் சென்றார். பிரதமர் ஆனார்; கோவைக்கு வந்து, ‘ரோடு ஷோ’ நடத்திக் காட்டினார்.
‘ரோடு ஷோ’ நடத்தியபோது, ஆர்.எஸ்.புரத்தில், 58 பேருக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். இறந்துபோன இஸ்லாமியர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார். நாங்கள் இந்தியர்கள் என்பதே எங்கள் அடையாளம்.
விழித்துக்கொள்ளுங்கள்
பிரதமர் மோடியின் நேரடி கட்டுப்பாட்டில், கோவை இருக்க வேண்டும்; அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும்; கோவை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நானும் ஒரு கிறிஸ்தவன்; நானும் ஒரு இஸ்லாமியன் என, உதயநிதி சொல்கிறார். நானும் ஒரு ஹிந்து என சொல்லலாமே. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் நன்றாக இருக்க வேண்டுமெனில், ஓட்டுப்பிச்சை எடுப்பவர்களை, வீட்டுக்கு அனுப்புங்கள்.
கடந்த 1993ல் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தை தகர்த்தபோது, அல்-உம்மா இயக்கத்தினரை கைது செய்தனர். 1997, ஜன., மாதம் முக்கிய குற்றவாளிகள், பெயிலில் வெளியே வருகின்றனர். கோர்ட்டில் ஆஜராக வேண்டிய அரசு வக்கீல் ஆஜராகவில்லை.
அப்போது, தி.மு.க., ஆட்சி நடந்தது. அதே அல்-உம்மா இயக்கத்தினர், 1998ல் கோவையில் வெடிகுண்டு சம்பவத்தை நிகழ்த்தினர். 2009ல் அண்ணா நுாற்றாண்டு விழாவில், ஒன்பது பேரை விடுதலை செய்து விட்டனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
நடந்தபோது, வெடிகுண்டு சம்பவத்தில் கைதாகி சிறையில் இருப்பவர்களை, அரசு விடுதலை செய்யும் என மஸ்தான் பேசினார். கவர்னரை சந்தித்து, மனு கொடுத்து நிறுத்தி வைத்தோம்.
கோவை மக்களே, நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டும். ஓட்டுப்பிச்சையால் கோவையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு இருக்கிறது. எங்கேயோ செல்ல வேண்டிய கோவை ஸ்தம்பித்து நிற்கிறது. ஓட்டுப்பிச்சை எடுப்பதால், எப்படியும் ஜெயித்து விடலாம் என்கிற தைரியத்தில் இருக்கிறார்கள்
மிழர்களின் மிகப்பெரிய வியாதி மறதி; இவ்வியாதி இருக்கும் வரை ஓட்டுப்பிச்சை எடுக்கும் அரசியல், இருந்து கொண்டே இருக்கும். வரும் சட்டசபை தேர்தலில், ஆறு தொகுதிகளையும் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.