கோவையின் ‘மெட்ரோ’ கனவு நிறைவேறும்!

0
17

”கோவையில் ரூ.10,740 கோடி செலவிலும், மதுரையில் ரூ.11,340 கோடி செலவிலும் ‘மெட்ரோ ரயில்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தேவையான நிலம் கையகப்படுத்துவதற்கான ஆயத்தப் பணி, பிப்., மாதம் துவங்கும்,” என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக் கூறினார்.

இது தொடர்பாக, கோவையில் அனைத்து அரசு துறை உயரதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்த உள்ள திட்டங்களை, அந்தந்த துறை அதிகாரிகள் விளக்கினர். ‘மெட்ரோ ரயில்’ திட்ட அறிக்கையை மெட்ரோ நிறுவனத்தினர் கூறினர். தொழில்துறையினரின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

அதன்பின், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக் நிருபர்களிடம் கூறியதாவது:

கோவையில் அவிநாசி ரோடு, சத்தி ரோடு என இரு வழித்தடங்களில் 34.8 கி.மீ., துாரத்துக்கு, 32 நிறுத்தங்களுடன் ‘மெட்ரோ ரயில்’ திட்டம் உருவாக்கப்பட்டு, தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பித்தோம். மத்திய அரசு கேட்ட கூடுதல் விபரங்கள் வழங்கியுள்ளோம்; மதிப்பாய்வு செய்யப்படுகிறது. ஒப்புதலை எதிர்பார்த்திருக்கிறோம்.

மதுரையில் ரூ.11,340 கோடி செலவில், திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை, 32 கி.மீ., வரை சுரங்கப் பாதையாக ‘மெட்ரோ ரயில்’ வழித்தடம் அமைகிறது.

கோவையில் ரூ.10,740 கோடி செலவில் திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. கோவையில் உயர்மட்ட பாலத்தில் மெட்ரோ ரயில் செல்லும். 30 மீட்டருக்கு ஓரிடத்தில் துாண் அமையும். ‘மெட்ரோ’ பணிமனை அமைக்க, 16 ஹெக்டேர் நிலம் தேவை. இரு வழிகளிலும், வழித்தடம் அமைக்க, 10 ஹெக்டேர் நிலம் தேவைப்படும். மெட்ரோ ரயிலில் 3 கோச்கள் இருக்கும்; ஒரு சமயத்தில் 700 பேர் பயணிக்கலாம். திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மூன்றரை ஆண்டுகளாகும். நிலம் கையகப்படுத்துதல், பாதாள சாக்கடை, மின் புதை வடம் போன்றவற்றை மாற்றியமைக்கும் பணிகள் மேற்கொள்ள இரண்டு ஆண்டுகளாகும். முன்கூட்டியே திட்டமிடும் வகையில், தேவையான நிலம்

முன்கூட்டியே திட்டமிடும் வகையில், தேவையான நிலம் கையகப்படுத்துவதற்கான ஆயத்த பணி, பிப்ரவரியில் துவக்கப்படும். நிலம் கையகப்படுத்த மார்ச்சுக்குள் நோட்டீஸ் வினியோகிக்க, தயார் செய்து வருகிறோம்; அதற்குள் அனுமதி கிடைக்க வேண்டும்.

‘அனைத்தும் ஓரிடத்தில்’

பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையம் மற்றும் மெட்ரோ ஸ்டேஷன்கள் தனித்தனியாக இருக்கக் கூடாது; அவை ஒன்றாகவே அமைய வேண்டும்.

ஒரே வளாகத்தில் ரயில்வே ஸ்டேஷனும் இருக்க வேண்டும்; மெட்ரோ ஸ்டேஷனும் இருக்க வேண்டும். விமான நிலையத்திலும் இதேபோல் அமைய வேண்டும். அதுவே சரியான வடிவமைப்பாக இருக்கும். மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும்போது, உக்கடத்தில் பஸ் ஸ்டாண்ட் இருக்கும்; அதே இடத்தில் மெட்ரோ ஜங்ஷன் வரும்.

மேம்பாலத்துக்கு சிக்கலா?

அவிநாசி ரோட்டில் தற்போது நீலாம்பூர் வரையும்; விமான நிலையத்துக்கும் மெட்ரோ பாதை வழித்தடம் வடிவமைக்கப்பட்டு உள்ளது; எதிர்காலத்தில், எல் அண்டு டி பைபாஸ் இணைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

கோல்டுவின்ஸ் முதல் நீலாம்பூர் வரை மேம்பாலம் நீட்டிப்பு திட்டமும் தேவையே; மெட்ரோ ரயில் திட்டமும் தேவை.

இவ்விரு திட்டங்களையும் ஒருங்கிணைந்து செயல்படுத்த நெடுஞ்சாலைத்துறையுடன் ஆலோசித்துள்ளோம். தற்போது கட்டப்படும் மேம்பாலத்தையும் கருத்தில் கொண்டே, மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

‘நிலம் கையகப்படுத்தல்’

‘மொபிலிட்டி பிளான்’ல் திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு மற்றும் நீட்டிப்பு பணிகள் திட்டமிடப்பட்டு உள்ளது. ‘காமன் மொபிலிட்டி பிளான்’ அப்டேட் வரும்போது, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோடு மற்றும் தொண்டாமுத்துார் ரோடு இணைப்பு வரும்.

நிலம் கையகப்படுத்த வேண்டிய இடங்களை தேர்வு செய்து, அறிவிப்பு வெளியிட்ட பின், அதற்கான பணிகள் துவக்கப்படும். நில உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தி, இழப்பீடு வழங்கப்படும் இவ்வாறு, அவர் கூறினார்.

ஆலோசனை கூட்டத்தில், கோவை கலெக்டர் கிராந்திகுமார், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குனர் அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் லிவிங்ஸ்டோன் எலியாசர், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், டி.ஆர்.ஓ., ஷர்மிளா, உதவி கலெக்டர் (பயிற்சி) அங்கித்குமார் மற்றும் அரசு துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.