தொண்டாமுத்தூர்; கோவை மாவட்டத்தில் உள்ள பல மலைக்கிராமங்கள், தங்கள் ஊராட்சியின் எல்லையை தாண்டி வெளியே இருப்பதால், குடிநீர், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல், இங்குள்ள மக்கள் தவித்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைகளை, பூர்வீகமாக கொண்ட மலைவாழ் மக்கள், 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசு சார்பில், இம்மக்களை மேம்படுத்தவும், இவர்கள் வசிக்கும் கிராமங்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரவும், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இவைதான் காரணங்கள்
ஆனாலும், கோவையில் உள்ள பல மலைக்கிராமங்களின், அடிப்படை தேவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. இதற்கு, பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், ஊராட்சிக்குட்பட்ட எல்லையை தாண்டி மலைக்கிராமங்கள் உள்ளதும், அவ்விடங்களில் இருந்து அரசுக்கு வருவாய் கிடைப்பதில்லை என்பதும்தான் முக்கிய காரணங்கள்.
எடுத்துக்காட்டாக, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டு, 10 ஊராட்சிகள் உள்ளன. இதில், 14 மலை கிராமங்கள் உள்ளன. இதில், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்குட்பட்டு, ஜாகிர் போரத்தி, சர்க்கார் போரத்தி, பட்டியார்கோவில்பதி, மடக்காடு, முள்ளாங்காடு, பழைய பச்சான்வயல்பதி, புதிய பச்சான்வயல்பதி, சவுக்குகாடுபதி ஆகிய மலை கிராமங்கள் உள்ளன.
இதில், பழைய பச்சான்வயல்பதி, புதிய பச்சான்வயல்பதி, சவுக்குகாடுபதி ஆகிய பகுதிகளுக்கு, இக்கரைபோளுவாம்பட்டி ஊராட்சி எல்லையில் இருந்து செல்ல வேண்டும் என்றால், வெள்ளிமலைப்பட்டிணம், நரசீபுரம் ஆகிய, 2 ஊராட்சிகளை கடந்தே செல்ல வேண்டியுள்ளது.
இதனால், இந்த ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து, இந்த மலைக்கிராமங்களுக்கு எந்த திட்டத்தை கொண்டு செல்ல வேண்டும் என்றாலும், இரண்டு ஊராட்சிகளை கடந்தே கொண்டு செல்ல வேண்டும். இதனால் ஊராட்சிக்கு, நிதியிழப்பு, காலவிரயம் போன்ற சிரமங்கள் உள்ளன.
2 பஸ் மாற வேண்டும்
இங்கு வசிக்கும் மக்கள், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால், 5 கி.மீ., நடந்து வந்து, அதன்பின், 2 பஸ் மாற வேண்டும்.
இந்த மூன்று மலைக் கிராமங்களிலும், போர்வெல் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த போர்வெல் குடிநீரில் சமைத்தால், சமைக்கும் பாத்திரம் முழுவதும், உப்பு படியும் அவல நிலை உள்ளது. இம்மலை கிராமத்திற்கு தார் சாலை வசதி இருந்தும், பஸ் இயக்கப்படவில்லை. பஸ் ஏற, 5 கி.மீ., தினமும் நடந்து, நரசீபுரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பள்ளி செல்லும், 10 குழந்தைகளும், தினமும் நடந்து சென்று வருகின்றனர். இப்பகுதிக்கு, நல்ல குடிநீர் மற்றும் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக, அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இவர்களின் பரிதாப குரலை எந்த அரசும் கேட்பதில்லை.
அதேபோல, இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஜாகிர் போரத்தி, சர்க்கார் போரத்தி மலைவாழ் மக்கள், தங்களின் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வர வேண்டுமானால், மத்வராயபுரம் ஊராட்சி, ஆலாந்துறை பேரூராட்சியை கடந்தே வர வேண்டும்.
நரசீபுரம் ஊராட்சிக்குட்பட்ட தாணிக்கண்டி மலைவாழ் மக்கள், எந்த தேவைக்கும், இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி பகுதியை கடந்தே வர வேண்டும்.
குடிநீர் வசதி இல்லை
அதோடு, சிறுவாணி அடிவார வனப்பகுதியில் உள்ள, மத்வராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளபதி, பொட்டப்பதி மலைக்கிராமங்களுக்கு, இன்று வரை, சிறுவாணி குடிநீர் வசதி இல்லாததால், ஆற்றில் இருந்தே குடிநீர் எடுத்து வருகின்றனர்.
கோவை மாவட்டமே, சிறுவாணி நீரை சுவைக்கும்போது, அதன் அடிவாரத்தில் உள்ள, 2 மலைக்கிராமங்களுக்கு சிறுவாணி குடிநீர் கிடைக்காமல் உள்ளது வினோதம்தான்.
இந்த கிராமங்களுக்கு, தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதோடு, ஊராட்சிக்கு வெளியே உள்ள மலைக்கிராமங்களை, அருகில் உள்ள ஊராட்சிகளுடன் இணைத்தால், அரசின் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு விரைந்து கிடைக்கும் என்பதையும் அதிகாரிகள் புரிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தின் புதிய கலெக்டர் பவன் குமார், மனது வைப்பாரா?