வளர்ந்த நாடுகள் மட்டுமின்றி, தற்போது நமது நாட்டிலும் நெரிசல் மிகுந்த நகரங்களில் தங்கும் விடுதிகளில், கேப்சூல் பாட்ஸ் எனப்படும் குறைந்த இடத்தில் அதிகம் பேர் தங்கும் வசதி உள்ளது
அத்தகைய ஒரு வசதியுடன், புதிய தங்கும் விடுதி, எல் அண்ட் டி பை-பாஸ் சாலையை அடுத்து பாலத்துறை செல்லும் சாலையில் சுமார், 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இங்கு முதல் தளத்தில் ஒருவருக்கான 40 பாட்ஸ்கள், இரண்டாம் தளத்தில் இருவருக்கான எட்டு பாட்ஸ்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் டிவி.,- ஏ.சி.,- யு.எஸ்.பி.. வைபை வசதிகள் உள்ளன. நான்கு, எட்டு மற்றும் 24 மணி நேரம் என நேரத்துக்கு ஏற்ப தங்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து, விடுதி நிர்வாகி திவ்யா கூறுகையில், ”மும்பை, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் கேப்சூல் பாட்ஸ்கள் உள்ளன. அத்தகைய வசதியை இங்கு தரவேண்டும் என, எனது தந்தை உத்தமராஜ் நினைத்து, அதனை செயல்படுத்தியுள்ளார். நீண்ட தூரம் பயணம் செல்வோர் ஓய்வெடுக்க, இத்தகைய பாட்ஸ்களை விரும்புகின்றனர்,” என்றார்.
மற்றொரு நிர்வாகி கோபால் கூறுகையில், ”கேப்சூல் பாட்ஸ் சீனாவிலிருந்து வாங்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளரின் பொருட்கள் வைக்க தனி லாக்கர்கள் உள்ளன. காலணிகளை வைக்கவும் தனி வசதி செய்யப்பட்டுள்ளது. பாட்ஸ்கள் உள்ள பகுதிக்கு செல்ல, நாங்களே காலணி தருகிறோம்.
தண்ணீர் பாட்டில் தரப்படும். 24 மணி நேரம் தங்குவோருக்கு பேஸ்ட், பிரஷ் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர் தனது அலுவலக பணியை மேற்கொள்ள, இரண்டாம் தளத்தில் இட வசதி உள்ளது. விரைவில் ஓட்டலும் அமைக்கப்படவுள்ளது. கார், பைக் நிறுத்த தேவையான இடவசதி உள்ளது, என்றார்.