கிணத்துக்கடவு; கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, கோதவாடி குளத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின், பி.ஏ.பி., யில் இருந்து தண்ணீர் விடப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை, கிணத்துக்கடவு கோதவாடி குளம், 384 பரப்பளவில் உள்ளது. இந்த குளம் கடந்த இரண்டு ஆண்டுகளாக வறட்சியாக காணப்பட்டது.கோதவாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும்பாலான மக்கள், விவசாயம் சார்ந்த தொழில் செய்து வருவதால், இந்த குளத்திற்கு பி.ஏ.பி., யில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும் என, கோதவாடி குளம் பாதுகாப்பு அமைப்பு, ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள், பல அரசு
அதிகாரிகள் மற்றும் பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமியிடம் மனு அளித்தனர்.
பி.ஏ.பி., அலுவலகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, நடந்த கூட்டத்தில் பி.ஏ.பி., பாசன திட்ட அணையில் நீர் இருப்பு அதிகமாக இருப்பின், கோதவாடி குளத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, கடந்த 13ம் தேதி, கோதவாடி குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நாளை (18ம் தேதி) வரை வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இக்குளத்திற்கு தண்ணீர் வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு வறட்சி ஏற்பட்டாலும், கோதவாடியை சுற்றியுள்ள 30 கிராமங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும், பி.ஏ.பி., யில் இருந்து வெளியேறும் உபரி நீரை, கோதவாடி குளத்திற்கு விட அரசாணை வெளியிட வேண்டும். இவ்வாறு செய்தால், கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதி விவசாயத்தில் கூடுதல் வளர்ச்சி பெறும். விவசாயம் சார்ந்த தொழில்கள் செழிக்கும் என, கோதவாடி மக்கள் வலியுறுத்துகின்றனர்.