கோவை; கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரி வீர பெருமாளிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த, கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. அங்கு, 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.
வழக்கு பதிவு செய்தனர். கார் ஓட்டுனர் கனகராஜ், சயானின் மனைவி மற்றும் குழந்தை சாலை விபத்தில் உயிரிழந்தனர். கோடநாடு எஸ்டேட்டில் கணினி பணியாளராக பணியாற்றிய தினேஷ், தற்கொலை செய்து கொண்டார். கொள்ளை வழக்கு மற்றும் நான்கு பேரின் மரணம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். 240க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெ., தனி பாதுகாப்பு அதிகாரியாக (பி.எஸ்.ஓ.,) பல ஆண்டுகள் பணியாற்றி வந்த, ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., வீரபெருமாளிடம் விசாரணை நடத்த, அவருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். காந்திபுரம் பகுதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில், நேற்று விசாரணைக்கு ஆஜரான அவரிடம், மூன்று மணி நேரம் விசாரணை நடந்தது.
அதன்பின் வீர பெருமாள் கூறுகையில், ”1991ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை, ஜெ.,வின் தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்தேன். அவரை தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றவில்லை. வழக்கு தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு, எனக்கு தெரிந்த விஷயங்களை கூறியுள்ளேன்,” என்றார்.