கோவை:கோடநாடு வழக்கில் தொடர்புடைய கணினி ஆப்பரேட்டர் தினேஷ் தற்கொலை தொடர்பாக மூவரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களாவில், கடந்த, 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.
இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த, 10 பேரை கைது செய்தனர்.
வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, வழக்கு தொடர்பாக தகவல்களை சேகரிக்க பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோடநாடு வழக்கில் தொடர்புடைய கணினி ஆப்பரேட்டர் தினேஷ் தற்கொலை செய்து கொண்ட வழக்கு, தனி வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.
அவ்வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க., பிரமுகர் சங்கரன், மின் வாரிய ஊழியர் சுரேஷ் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் கபீர் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் மூவரும் நேற்று கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் செயல்பட்டு வரும் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகினர்.
தினேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம், உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தொடர்பாக டி.எஸ்.பி., அண்ணாதுரை மூவரிடமும் விசாரணை நடத்தினார்.