தொண்டாமுத்துார்: கோவையில், கொளுத்தி வரும் வெயிலின் காரணமாக, பெரும்பாலான குளங்கள் வறண்டு வருகின்றன.
கோவை, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து ஆயிரக்கணக்கான ஓடைகள் இணைந்து நொய்யல் ஆறு உருவாகி வருகிறது. நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையாக சித்திரைச்சாவடி தடுப்பணை உள்ளது.
இந்த தடுப்பணையிலிருந்து நொய்யல் ஆற்றின் கிளை வாய்க்கால்கள் உருவாகின்றன. நொய்யல் ஆறு மற்றும் அதன் கிளை வாய்க்கால்களால், கோவையில் உள்ள குளங்கள் மற்றும் குட்டைகளுக்கு நீர் வசதி கிடைக்கிறது. குளம், குட்டைகளில் நீர் தேக்கி பராமரிப்பதால், சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு பாசன வசதிகளும், நிலத்தடி நீர்மட்டமும் உயருகிறது.
இந்நிலையில், நொய்யல் ஆற்றின் பிரதான நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த இரண்டு மாதங்களாக மழை இல்லாமல் உள்ளது. அதோடு, கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக, குளங்கள் மற்றும் குட்டைகளில் நீரின் அளவு வெகுவாக குறைந்து, வறண்டு வருகிறது.
பொதுப்பணித்துறை நீர் வள ஆதார அதிகாரிகள் கூறுகையில், ‘நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், போதிய மழை பெய்யாததால், ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால், குளங்களிலும் நீரின் அளவு குறைந்து வருகிறது. உக்குளத்தில், 80 சதவீதமும், வேடபட்டி புதுக்குளம், கோளராம்பதி, நரசாம்பதி குளங்களில், 50 சதவீதமும், பேரூர் பெரிய குளத்தில், 70 சதவீதமும், சொட்டையாண்டி குட்டை மற்றும் கங்கநாராயண சமுத்திரத்தில், 30 சதவீதமும் நீர் உள்ளது’ என்றனர்