மேட்டுப்பாளையம்,ஜன.30: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பெத்திக்குட்டை பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் வாலிபரின் சடலம் ஒன்று கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் மிதந்து கொண்டிருப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறுமுகை இன்ஸ்பெக்டர் நிர்மலா தலைமையிலான போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்,இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த நபருக்கு சுமார் 20 முதல் 25 வயதிற்குள் இருக்கலாம் என்பதும்,கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக இளைஞர் மீட்கப்பட்டுள்ளதால் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிக்கு வந்தார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.