கைத்தறி துணி விற்கும் பஸ்சுக்கு மக்களிடம் வரவேற்பு

0
8

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் உலா வரும் கைத்தறி பஸ்சிற்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் செயல்பட்டு வரும் சென்குமார் தொடக்க கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பாக தயார் செய்யப்படும் போர்வைகள், துண்டுகள், மெத்தை விரிப்புகள், தலையணை உறைகள் போன்ற கைத்தறி துணிகள் கோ-ஆப்டெக்ஸிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இதனிடையே, மக்கள் மத்தியில் கைத்தறி பொருட்களை எளிதாக விற்பனை செய்ய, பஸ்சின் வாயிலாக கைத்தறி துணிகளை ஏற்றிக்கொண்டு, மக்கள் மத்தியில் வலம் வந்து, விற்பனையில் இச்சங்கம் அசத்தி வருகிறது.

இதற்காக தமிழக அரசின் புதுமை முயற்சிகள் ஊக்குவிப்பு திட்டத்தின் வாயிலாக பஸ் ஒன்று இச்சங்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் தற்போது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகள் முழுவதும் கைத்தறி துணிகளை வியாபாரம் செய்து வருகிறது.

இதுகுறித்து சேல்ஸ்மேன் பழனிவேல் கூறியதாவது:-

40 சதவீதம் மக்கள் கைத்தறி துணிகளை விரும்பி வாங்குகின்றனர். மக்களிடம் சென்று கைத்தறி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த பஸ் உள்ளது. நாங்கள் ஒவ்வொரு ஊராக இந்த பஸ்ஸை கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றோம். தினமும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை ஆகும்.

சில நாட்கள் ரூ. 20 ஆயிரமும் விற்பனை ஆகும். சிலர் எங்களை அணுகி தனியார் கல்லூரிகள், பள்ளிகள், விடுதிகள் போன்ற இடங்களுக்கு தாங்களாகவே முன் வந்து அழைத்து செல்கின்றனர். மக்கள் அமோக ஆதரவு தருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.