மூணாறில் முன்னாள் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆக்கிரமித்து வைத்திருந்த 5.68 சென்ட் நிலம், கட்டடத்தை வருவாய்துறையினர் மீட்டனர்.
மூணாறில் மகாத்மா காந்தி காலனியை ஒட்டி இக்கா நகரில் 5.68 சென்ட் நிலம் ராஜேந்திரன் வசம் இருந்தது. அந்த இடத்திற்கு சர்வே எண்ணில் குளறுபடி உள்ளதாகவும், அதனை மாற்றி கொடுக்குமாறு தேவி குளம் சப் கலெக்டரிடம் மனு அளித்தார். நில ஆவணங்களை ஆய்வு செய்த போது, அவை போலி எனவும், அது அரசு நிலம் எனவும் தெரியவந்ததால், மனுவை சப்கலெக்டர் நிராகரித்தார்.
அதனை தொடர்ந்து ராஜேந்திரன் வருவாய்துறை (நிலம்) ஆணையரிடம் முறையிட்டு மனு அளித்தார். அவர் மனுவை நிராகரித்ததுடன், நிலத்தை கையகப்படுத்துமாறு வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி தேவிகுளம் தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் 2023 ஏப்.30ல் கட்டடத்துடன் நிலத்தை மீட்டனர். அதற்கு எதிராக ராஜேந்திரன் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், முரளிகிருஷ்ணா ஆகியோர் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
இதையடுத்து அதனால் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு தேவிகுளம் தாசில்தார் ஹரிகுமார் தலைமையில் வருவாய் துறையினர் போலீசாரின் உதவியுடன் கட்டடம், நிலத்தை மீட்டனர். அதில் தேவிகுளம் சிறப்பு தாசில்தார் ( நிலம் பதிவு) அலுவலகம் என போர்டு வைத்தனர்.
சில காரணங்களால் ராஜேந்திரன் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.