பொள்ளாச்சி,
தமிழகத்தில் அரசு சார்பில் ரேஷன் கடை மூலம் ஏழை, எளிய மக்களுக்கு மாதந்தோறும் இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அரிசியை பெறுபவர்கள் இதனை வெளியில் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும், இதனைமீறி சிலர் கடத்தல் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். இங்கு கிலோ ரூ.7 முதல் ரூ.10 வரை பொதுமக்களிடம் ரேஷன் அரிசி கொள்முதல் செய்யும் வியாபாரிகள், கேரளாவிற்கு கடத்தி அங்கு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவிற்கு காரில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக பொள்ளாச்சி குடிமைப் பொருள் தாசில்தார் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் தனது குழுவினருடன் பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த காரை அதிகாரிகள் நிறுத்த முயன்றனர். ஆனால், கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து போலீசார் காரை துரத்தி சென்று வக்கம்பாளையத்தில் மடக்கி பிடித்தனர். ஆனால் காரில் வந்த 2 பேரும், அங்கிருந்து தப்பியோடி விட்டனர். தொடர்ந்து காரை சோதனை செய்ததில், 10-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் காரையும், ரேஷன் அரிசியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்தி வந்த 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.